சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் வெற்றி – தொடரும் கொண்டாட்டங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய் உட்பட பலர் நடிப்பில் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின்செல்வன் 1 பெரும் வெற்றி பெற்றுள்ளது.அதனால் படத்தில் பணியாற்றிய அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இதனால், அப்படக்குழுவினர் தொடர்ந்து விருந்துகள் வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.

படத்தில் நடித்த நடிகர் நடிகையர்கள் உள்ளிட்ட முன்னணியினருக்கு தன்னுடைய பெசண்ட்நகர் வீட்டிலேயே மதுவிருந்து கொடுத்தார் மணிரத்னம்.

அதன்பின், படத்தில் பணியாற்றிய இசைக்குழுவினருக்கு மட்டும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நட்சத்திர விடுதியொன்றில் விருந்து கொடுத்து அனைவருடனும் தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டாராம்.

அதற்கடுத்து, படத்தின் தொடக்கத்தில் குரல் கொடுத்த நடிகர் கமல்ஹாசனுக்கு மட்டும் தனியாக ஒரு விருந்தை ஏற்பாடு செய்து அவருக்குச் சிறப்புச் செய்திருக்கிறார் மணிரத்னம்.

இவற்றைத் தொடர்ந்து, நவம்பர் 5 ஆம் தேதி ஒரு மிகப்பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்களாம்.

லைகா நிறுவனம் ஏற்பாடு செய்யும் அவ்விருந்தில் கலந்து கொள்வதற்காக சென்னை வருகிறாராம் லைகா நிறுவனர் சுபாஸ்கரன்.

அவ்விருந்துக்கு படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறதாம். விருந்தோடு நினைவுப்பரிசுகளும் வழங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இவ்விருந்துக்காக வரும் லைகா நிறுவனர் சுபாஸ்கரன், அப்படியே ரஜினிகாந்த் நடிக்கும் புதியபடத்தின் தொடக்கவிழாவிலும் பங்கேற்கவிருக்கிறார்.

இவ்விருந்துக்கு முன்பாக, பொன்னியின் செல்வன் படத்தில் பணியாற்றிய பல முக்கியப் புள்ளிகள் தஞ்சாவூர் சென்று பெரியகோயிலில் சாமி கும்பிடவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

Related Posts