சினிமா செய்திகள்

உங்கள் திரைப்பட வாழ்க்கை முடிந்துவிட்டதா? – நேரில் கேட்ட நீதிபதி அதிர்ந்து நின்ற விஷால்

நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21 கோடியே 29 இலட்சம் கடன் பெற்றிருந்தார்.
ஒருகட்டத்தில் அந்தக் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டது.

இது தொடர்பாக, விஷாலும் லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் கடன் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் அனைத்துப் படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்களுக்குக் கொடுக்க வேண்டிய ரூ.21 கோடியே 29 இலட்சம் பணத்தைக் கொடுக்காமல் நடிகர் விஷால் தயாரிக்கும் ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை தமிழ் உள்ளபட பிற மொழிகளில் வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்கவும் தடை விதிக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரூ.15 கோடி வங்கியில் மூன்று வாரங்களில் நிரந்தர வைப்பீடாக வைக்க வேண்டும் என்று விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. மார்ச் மாத இறுதியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விஷால் அவ்வாறு பணத்தை வைப்பீடு செய்யவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்ற உத்தரவுப்படி விஷால் நீதிமன்றத்தில் நேர்நின்றார்.

அப்போது, நீதிமன்ற உத்தரவை ஏன் இன்னும் அமல்படுத்தவில்லை? என்று விஷாலிடம் நீதிபதி கேட்டார்.

அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லைகா நிறுவனம் மேல்முறையீடு சென்றதால் தான் பணத்தைச் செலுத்தவில்லை. விஷாலுக்கு ஒரே நாளில் ரூ.18 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது. அதற்கும் வட்டி கட்டி வருகிறார். 6 மாதங்கள் ஆனாலும் செலுத்த இயலாது என்றார்.

அதற்கு லைகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தொடர்ந்து படங்களில் நடித்துவரும் நிலையில் விஷால் தவறான தகவல்களைத் தெரிவித்து வருகிறார். வேண்டுமானால் கணக்கு விவரங்களை தாக்கல் செய்யட்டும் என்றார்.

அப்போது நீதிபதி, தொடர்ந்து படத்தில் நடிக்கும்போது கடனைத் திரும்பச் செலுத்தலாமே, திரைப்பட வாழ்க்கை முடிந்து விட்டது என்று சொல்ல வருகிறீர்களா? என விஷாலிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு விஷாலின் வழக்கறிஞர், சினிமா வாழ்க்கை முடிந்ததாகக் கூறவில்லை. நட்டத்தைச் சரி செய்யவே தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் என்று கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விஷாலின் விளக்கத்தையும், சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 9 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

அன்றைய தினமும் விஷால் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இது விஷாலுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Posts