40 ஆண்டுகளில் கமல் போட்ட முதல் கையெழுத்து – ஆச்சரிய தகவல்
கமல், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில் உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் விக்ரம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்திருக்கும் இந்தப் பெருவெற்றியை மகிழ்வுடன் கொண்டாடிவருகிறார் கமல்.
படத்தில் பணியாற்றிய துணை இயக்குநர்களுக்கு விலையுயர்ந்த துள்ளுந்துகள், இயக்குநர் லோஜேஷ்கனகராஜுக்கு விலையுயர்ந்த மகிழுந்து, படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்த சூர்யாவுக்கு மிக விலையுயர்ந்த ரோலக்ஸ் கடிகாரம் ஆகிய பரிசுகளைக் கொடுத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகிறார் கமல்.
இந்நிலையில் இவ்வளவு ஆண்டுகளாகத் திரைப்படத்துறையில் இருக்கும் அவர் இதுவரை எந்தப்படத்துக்கும் செய்யாத ஒரு வேலையை விக்ரம் படத்துக்காகச் செய்திருக்கிறார் என்கிற ஆச்சர்ய தகவல் உலவுகிறது.
அப்படி என்ன வேலை?
கமலின் சொந்தப்பட நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம், 1981 ஆம் ஆண்டு தங்கள் முதல் தயாரிப்பான ராஜ்பார்வை திரைப்படத்தை வெளியிட்டது.
அதன்பின் அந்நிறுவனம் ஏராளமான படங்களைத் தயாரித்தது. பல வெற்றி தோல்விகளைச் சந்தித்து வந்திருக்கிறது.
அந்நிறுவனம் தொடங்கியபோதே, கமல்ஹாசன் மற்றும் அவருடைய அண்ணன் சந்திரஹாசன் ஆகியோர் அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள்.
எனவே, இதுவரை ராஜ்கமல் தயாரித்த படங்களுக்காகக் கடன் வாங்குவதென்றால் கடன்பத்திரங்களில் கையெழுத்திடுவது சந்திரஹாசன் தானாம்.
இப்போது அவர் மறைந்துவிட்டதால், இப்படத்துக்காக மதுரை அன்புவிடம் கடன் வாங்கியபோது முதன்முறையாக கமல்ஹாசன் கையெழுத்திட்டுக் கடன் வாங்கியிருக்கிறார். தொடக்கத்தில் ஐம்பது கோடி அதன்பின் பல கோடிகள் என வாங்கும்போதும் கமல்தான் கையெழுத்திட்டிருக்கிறார்.
முதன்முறை கையெழுத்திட்டு வாங்கிய கடனை படவெளியீட்டுக்கு முன் அடைத்துவிட்டு இப்போது மிக மகிழ்ச்சியாக உலாவந்து கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.












