கமலும் ரஜினியும் சேர்ந்து நடிக்கும் படம் – விவரங்கள்
சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த்தை அவர் வீட்டுக்குச் சென்று சந்தித்தார் நடிகர் கமல்.அவர் மட்டுமின்றி விக்ரம் பட இயக்குநர் லோகேஷ்கனகராஜ் விக்ரம் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேந்திரன் ஆகியோரும் ரஜினிகாந்த்தைச் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்புகளுக்குக் காரணம், விக்ரம் படவெளியீட்டையொட்டி ரஜினிகாந்தின் ஆதரவைக் கோருவது என்பதுபோல் சொல்லப்பட்டது.
ஆனால், அந்தச் சந்திப்பில் நடந்தது வேறு என்கிறார்கள்.
என்ன நடந்தது?
விக்ரம் படத்துக்கு முன்னதாகவே, கமலின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்குவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை. அதற்குப் பதிலாகக் கமலை நாயகனாக வைத்து விக்ரம் படத்தை இயக்கிவிட்டார் லோகேஷ்கனகராஜ்.
இப்போது மீண்டும் கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் அப்படம் உருவாகும் என்கிறார்கள். அதற்கான ஒப்பந்தம் அந்தச் சந்திப்பில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது.
ரஜினி இப்போது நெல்சன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அது அவருடைய 169 ஆவது படம்.
அதற்கடுத்து ரஜினியின் 170 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறாராம்.ரஜினி, நெல்சன் படத்தை முடித்துவிட்டு வரவும், லோகேஷ்கனகராஜ், விஜய் படத்தை முடித்துவிட்டு வரவும் சரியாக இருக்கும் எனத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
இதில் மிகமிக முக்கியமான செய்தி ஒன்றும் உள்ளடங்கியிருக்கிறதென்கிறார்கள்.
ஆம், ரஜினியின் இந்தப்படத்தில் கமலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
எதிரெதிர் துருவங்களாக இருந்த இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து நடிப்பதென எடுத்திருக்கும் முடிவு இருதரப்பு இரசிகர்களுக்கும் உற்சாகமாக இருக்கும் என்பதிலும் பொதுவான திரைப்பட இரசிகர்களுக்குக் கொண்டாட்டமான அனுபவமாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.











