ஒப்பந்தத்தை மீறிய விஷால் – ஓங்கிக் குட்டிய நீதிமன்றம்
நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 21.29 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார்.
பின்னர், இந்தக்கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. கடனை ஏற்று செலுத்துவது தொடர்பாக விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்துப் படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்களுக்கு வழங்க வேண்டிய 21.29 கோடி ரூபாயை வழங்காமல், வீரமே வாகை சூடும் என்ற படத்தை தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியிடவும், தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் இணையதள ஒளிபரப்பு உரிமையை விற்கத் தடை விதிக்க வேண்டும் என லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், படம் ஏற்கனவே வெளியாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மூன்று வாரங்களில் நிரந்தர வைப்பீடாக டிபாசிட் செய்ய வேண்டும் என விஷால் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி,அதற்கான ஆதாரத்தை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் சமர்ப்பிக்க அறிவுறுத்தி, விசாரணையை மார்ச் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
இதனால் விஷாலுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.











