வீரமே வாகை சூடும் – திரைப்பட விமர்சனம்
தலைமைக்காவலராகப் பணிபுரியும் மாரிமுத்துவின் மகன் விஷால். அவரும் விரைவில் காவல்துறையில் சேரவிருக்கிறார். அம்மா துளசி, தங்கை ரவீனா ஆகியோர் கொண்ட அளவான குடும்பம். சாதாரண மனிதராக வலம்வரும் விஷால், தங்கைக்கு ஏற்படும் ஆபத்து காரணமாக அசாதாரணமானவராக மாறுகிறார். இதுதான் படம்.
விஷால் கொஞ்சம் எடை கூடியிருக்கிறார்.சண்டைக் காட்சிகளில் பின்னிப்பெடலெடுக்கிறார். காதல் காட்சிகளில் அசடுவழிகிறார். நடுத்தரவர்க்க இளைஞன் என்பதை நடிப்பில் காட்ட முயல்கிறார்.குடும்பத்தாரிடம் பேசுகிற சாக்கில் மக்களுக்குப் பாடம் எடுக்கிறார்.
நாயகி டிம்பிள்ஹயாதி. துள்ளலான வேடம் அவருக்கு. அதற்கேற்ப நடித்திருக்கிறார். பணிபுரியும் வங்கியின் மேலாளரிடம், இப்ப நான் உன் கூடப் படுக்கணுமா? என சீறும்காட்சி சிறப்பு. அடுத்த காட்சியிலேயே வரன் பார்க்க வந்தோரையும் பெற்றவர்களையும் பரிதவிக்க வைப்பது சீரழிவு.
விஷாலின் தந்தையாக வரும் மாரிமுத்துவுக்கு நடிப்புக்கு நல்ல வாய்ப்புள்ள காட்சிகள். அதைச் சரியாகப் பயன்படுத்தி நற்பெயர் பெறுகிறார். விஷாலின் அம்மாவாக வரும் துளசியும் பொருத்தம்.
கதையின் முக்கிய திருப்பத்துக்குக் காரணமான வேடத்தில் நடித்திருக்கும் ரவீனா நன்று.மரணபயம் சிறிதுமின்றி எங்க அண்ணன் வருவாண்டா என்று சொல்லும் காட்சி அருமை.
சிலகாட்சிகளில்வரும் ப்ளாக்ஷீப் தீப்தி,எல்லை மீறும் இன்றைய இளம்பெண்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கிறார். அவர் கழுத்தறுபடும் காட்சியில் அவருடைய நடிப்புத்திறமை வெளிப்படுகிறது.
யோகிபாபு சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். பல இடங்களில் பொறுமையைச் சோதிக்கிறார்.
காவல் ஆய்வாளராக நடித்திருக்கும் கவிதாபாரதி, நயவஞ்சகத்தைக் கண்களிலேயே காட்டுகிறார்.தன்னைக் கொல்லப்போகிறார்கள் என உணரும் கணநேரத்தில் பயத்தை சட்டென காட்டும் காட்சி சிறப்பு.
படத்தில் நிறைய வில்லன்கள். மூலவராக நடித்திருக்கும் பாபுராஜ், அவ்வளவு பெரிய தொழிலதிபருக்குப் பொருத்தமாக இல்லை.
குமரவேல் வேடம் நன்று. அதை உள்வாங்கி நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
கவின்ராஜின் ஒளிப்பதிவில் எதார்த்தம் இருக்கிறது.
யுவனின் இசையில் பாடல்கள் பெரிதாக இல்லை. பின்னணி இசை தேவைக்கேற்ப இருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் து.ப.சரவணன். விஷாலை சாமானிய மனிதர் என்று சொல்லிவிட்டு அவர் சிங்கம் என்பது உட்பட ஏராளமான பில்டப் வசனங்களும் காட்சிகளும் வைத்து சோதித்திருக்கிறார். வீரத்தைவிட விவேகத்தை அதிகம் நம்பியிருக்கிறார்.
விஷால், டிம்பிள்ஹயாதி, மரியம்ஜார்ஜ் ஆகியோரின் வேலைகளைக் திரைக்கதைக்குப் பயன்படுத்தியிருப்பது புத்திசாலித்தனம்.
நீளம் குறைத்தால் வாகை சூடலாம்.











