இயக்குநர் ராஜமெளலியுடன் நட்பு தொடரும் – லைகா தமிழ்க்குமரன் நம்பிக்கை
பாகுபலி திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் ஆர்ஆர்ஆர்.இரத்தம் ரணம் ரெளத்திரம் என்பதன் சுருக்கம்தான் ஆர்ஆர்ஆர்.
இப்படம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் இந்திய திரைத்துறையின் பல மொழிகளில் இருந்தும் பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தி நடிகை ஆலியா பட்,இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரகனி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
எஸ்.எஸ்.ராஜமௌலி திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.தமிழ் வசனங்கள் மற்றும் பாடல்களை கார்க்கி எழுத எம்.எம்.மரகதமணி இசையமைத்திருக்கிறார்.
இப்படத்துக்கு ஒளிப்பதிவு கே.கே.செந்தில்குமார்,படத்தொகுப்பு ஶ்ரீகர் பிரசாத்.
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜா,டிவிவி எண்டர்டெயின்மெண்ட் தானய்யா ஆகியோர் இணைந்து வழங்கும், இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் முன் வெளியீட்டுப் பணிகள் துவங்கியுள்ளன.
இன்று சென்னையில், இப்படத்தின் தமிழ்ப் பதிப்பின், பிரமாண்ட விழாவில் படத்தின் மூன்றாவது பாடல் வெளியிடப்பட்டது.
இவ்விழாவில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தமிழ்க்குமரன், தயாரிப்பாளர் என்வி.பிரசாத், தயாரிப்பாளர் தானய்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் தமிழ்க்குமரன் பேசியதாவது…..
பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி உடன் எங்கள் நிறுவனம் இணைவது எங்களுக்குப் பெருமை. உலகளவில் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளாகி இருக்கும் பிரமாண்ட படைப்பாக இப்படம் இருக்கிறது. இது நட்பு ரீதியிலான சங்கமம். இன்னும் பல படைப்புகளில் இது தொடருமென நம்புகிறோம். நன்றி.
தயாரிப்பாளர் தானய்யா பேசியதாவது….
இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இது எங்களுக்கு மிக முக்கியமான படைப்பு. உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென்று நம்புகிறோம், நன்றி.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பேசியதாவது…….
சில வருடங்களுக்குப் பிறகு உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி. நீண்ட நாட்கள் கழித்து உங்களைச் சந்திப்பதற்கு மன்னிக்கவும். அடுத்த மாதம் எங்கள் மொத்தப் படக்குழுவினருடன் உங்களை மீண்டும் சந்திப்போம். அதற்கு மிகப்பெரிய அளவில் திட்டமிட்டிருக்கிறோம். அப்போது உங்களது அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறோம்.
ஆர்ஆர்ஆர் (இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தில் மிகப்பெரிய ஆக்சன் காட்சிகள் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு ஆக்சன் காட்சிக்குப் பின்னும் பெரிய எமோஷன் இருக்கும், அந்த எமோஷன் தான் படத்தின் உயிர்நாடி. அந்த எமோஷனை, ஆத்மாவை வெளிக்காட்டும் ஒரு இசை தான் உங்களுக்கு இன்று அறிமுகப்படுத்தும் உயிரே பாடல்.
அண்ணன் மரகதமணி அவர்கள் தான் இசையமைத்துள்ளார். அவர் எப்போதும் படத்தின் காட்சிகளுக்கு இசையமைக்க மாட்டார். படத்தின் உயிர் எதைப்பற்றியதோ, படம் என்ன சொல்ல வருகிறதோ அதற்குத் தான் இசையமைப்பார். அப்படி இரத்தம் ரணம் ரௌத்திரம் படத்தின் மொத்த ஆத்மாவையும் இந்தப் பாடலில் கொண்டு வந்திருக்கிறார். மதன் கார்க்கி இந்தப்பாடல் கேட்டபோதே கண்ணீர் சிந்தி ரசித்தார், அருமையான பாடல் வரிகளைத் தந்திருக்கிறார். இதை இன்னும் உலகிற்குக் காட்டவில்லை, உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் பேசினார்.
வெள்ளை சட்டையோடு விழாவுக்கு வந்த இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி, படத்தின் பெயர் பொறித்த சிவப்பு சட்டையைப் படக்குழுவினர் கொடுத்ததும் மறுக்காமல் வாங்கி அணிந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.











