சினிமா செய்திகள்

ஜெய்பீம் திரையிடல் – 2டி நிறுவனத்தின் எச்சரிக்கை

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல்ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஜெய்பீம்.

இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் இணையதளத்தில் நவம்பர் 1,2021 ஆம் தேதி இரவு பத்துமணியளவில் வெளியானது.

அந்தப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. எல்லோரும் அப்படத்தைக் கொண்டாடிவருகிறார்கள்.

இந்நிலையில், இணையத்தில் கணக்கு இல்லாதவர்கள் மற்றும் சின்னத்திரையில் படம் பார்க்க விரும்பாதவர்களுக்கு வசதியாக சின்னச் சின்ன திரையரங்குகளளில் இப்படத்தைத் திரையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதாவது அமேசான் தளத்தின் இணைப்பைப் பயன்படுத்தி அதைப் பெரிய திரையில் திரையிடுகிறார்களாம். இதனால் ஒரு ஒரு நேரத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் படம் பார்க்கிறார்களாம்.அவர்களிடம் கட்டணமும் வசூலிக்கப்படுவதாகத் தெரிகிறது.

இது அமேசான் நிறுவனத்தின் வியாபாரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதன்காரணமாக, சூர்யாவின் 2டி நிறுவனம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், ஜெய்பீம் திரைப்படத்தை பொதுவெளியில் ஸ்ட்ரீம் செய்வது சட்டவிரோதமானது. வணிக நலனுக்காகப் படத்தைத் திரையிடுபவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அன்பான இரசிகர்கள் மற்றும் அன்பான பார்வையாளர்கள் இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களை ஆதரிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்நிறுவனம் கூறியுள்ளது.

திரைப்படங்களைப் பெரிய திரையில் பார்க்கும் ஆர்வம் உள்ளோர் அதிகம் என்பதாலேயே இம்மாதிரியான நிகழ்வுகள் நடக்கின்றன என்பதுதான் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய செய்தி.

Related Posts