இந்தியன் 2 சிக்கல் – ஷங்கரின் இரட்டைவேடம் அதிர்ந்து நிற்கும் லைகா
கமல்,காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் இந்தியன் 2.
சனவரி 18,2019 அன்று படப்பிடிப்புடன் சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது.
அதன்பின் பல்வேறு இடையூறுகளுக்கிடையே படப்பிடிப்பு தொடர்ந்தது.படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா சிக்கல் காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது.
இதனால் கமல்,விக்ரம் படத்தில் நடிக்கப் போய்விட்டார்.இயக்குநர் ஷங்கரும் தெலுங்குப்படம் இயக்கப்போனார்.
இந்நிலையில்,ஆகஸ்ட் 26,2021 அன்று சென்னை வந்த லைகா நிறுவனர் சுபாஷ்கரனுடன் நடந்த சந்திப்பின்போது இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுத்துவிடுவதாக இயக்குநர் ஷங்கர் கூறியிருந்தாராம்.
அதன்படி, கமல் பங்கு பெறாத காட்சிகளின் படப்பிடிப்பை உடனடியாகத் தொடங்கத் திட்டமிட்டு வேலைகளை ஆரம்பித்தனராம். அந்த வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போதே ராம்சரண் படம் தொடங்கப்பட்டிருக்கிறது.
தன்னிடம் ஒப்புக்கொண்டதற்கு மாறாக அந்தப்படம் தொடங்கப்பட்டதால் சுபாஷ்கரன் கோபமாகிவிட்டாராம். லைகா நிறுவனத்தினர் ஷங்கரிடம் இதுபற்றிக் கேட்டபோது, இது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி, பூஜை மட்டும்தான் போடுகிறோம் படப்பிடிப்பு தாமதமாகும் என்று சமாதானம் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.
அதோடு, சித்தார்த், பிரியாபவானிசங்கர் ஆகியோர் நடிக்க வேண்டிய காட்சிகள் உட்பட பல காட்சிகளைப் படமாக்குவதற்கேற்ப ஷங்கர் குழு தயாராகிக் கொண்டிருக்கிறதாம்.
ஆனால், ஷங்கர் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை என்கிற கோபத்தில் லைகா நிறுவனம் படப்பிடிப்பை நடத்தத் தேவையானவற்றைச் செய்துகொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
நாங்கள் படப்பிடிப்பு நடத்தத் தயாராக இருக்கிறோம், ஆனால் லைகா நிறுவனம் படப்பிடிப்புக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுக்கவில்லை என்று ஷங்கர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
என்ன நடக்கிறது.?
லைகா நிறுவனர் சுபாஷ்கரனுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது, இன்னும் இவ்வளவு நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கும் அதற்கு இவ்வளவு செல்வாகும் என்று ஷங்கர் சொல்லியிருந்தாராம். சுபாஷ்கரனும் அதற்குச் சம்மதம் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாராம்.
அதன்பின்,ஷங்கர் சொன்ன பட்ஜெட்படி சொன்ன நாட்களுக்குள் படத்தை முடித்துத் தருகிறேன் என்பதை ஒப்பந்தமாக எழுதி அதில் கையெழுத்துப் போடச் சொல்லியிருக்கிறார்கள்.
சுபாஷ்கரனிடம் ஒப்புக்கொண்ட ஷங்கர், சொன்னதை எழுத்தில் எழுதிக் கையெழுத்துக் கேட்டபோது போட மறுத்துவிட்டாராம்.
நாங்கள் சொல்லும் நாட்களில் படப்பிடிப்பு ஏற்பாடு செய்யுங்கள் நடக்கும் செல்வுகளை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள், எவ்வளவு நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்பதை இப்போது சொல்லமுடியாது, பட்ஜெட்டும் ஓப்பன் பட்ஜெட்டாக இருக்கட்டும் என்று ஷங்கர் தரப்பில் சொல்லப்பட்டதாம்.
இதனால் லைகா தரப்பு பயந்துவிட்டதாம்.
எவ்வளவு நாட்கள்? எவ்வளவு செலவு? என்பதைச் சொல்லாமல் இஷ்டத்துக்கும் செலவு இழுத்துவிடப்போகிறார் என்று பயந்துவிட்டார்கள்.
அதனால், பட்ஜெட் விசயத்தில் உண்மையாக இருந்தால் மட்டுமே படப்பிடிப்பு தொடங்குவது என்று லைகா தரப்பு உறுதியாக இருக்கிறதாம்.
அதனால்தான் சிக்கல் நீடிக்கிறது.
உள்ளுக்குள் இவ்வளவு விசயங்கள் நடப்பதை மறைத்துவிட்டு வெளியில் லைகா மேல் புகார் சொல்லிக்கொண்டிருக்கிறார் ஷங்கர் என்று லைகா தரப்பு நொந்துகொண்டிருக்கிறது.











