நாய் சேகர் பெயர் சர்ச்சை முடிவுக்கு வந்தது
நகைச்சுவை நடிகர் சதீஷ் கதையின் நாயகனாகவும் ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனம் கவர்ந்த பவித்ரா லட்சுமி கதாநாயகியாகவும் நடிக்கும் புதியபடமொன்று தயாராகியுள்ளது.
அந்தப்படத்தில், ஜார்ஜ் மரியன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், இளவரசு, லிவிங்ஸ்டன், ஞானசம்பந்தன் மற்றும் ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பல குறும்படங்கள் மற்றும் விளம்பரப் படங்களை இயக்கியவரும், யார்க்கர் ஃபிலிம்ஸ் எனும் யூடியூப் சேனலை நடத்தி வருபவருமான கிஷோர் ராஜ்குமார் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் 21 ஆவது படைப்பாகத் தயாராகியுள்ளது.
இந்தப்படத்துக்கு நாய்சேகர் என்று பெயர் வைத்து படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டார்கள்.
இந்நிலையில், 4 வருடங்களாக நடிக்காமல் இருந்த வடிவேலு திரும்ப நடிக்கவந்திருக்கிறார். சுராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் புதிய படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
அந்தப்படத்துக்கும் நாய்சேகர் என்று பெயர் வைத்திருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், இன்று மாலை ஆறு மணிக்கு சதீஷ் நடிக்கும் படத்தின் பெயரையும் முதல்பார்வையையும் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.
நாய்சேகர் என்ற பெயருடனும், வடிவேலு சாரின் ரசிகனாக இந்த முதல் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி.சதீஷ் உங்கள் பொறுப்பு அதிகமாகிவிட்டது சிறப்பாக செய்யுங்கள்,படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள் என்றும் சொல்லியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இதன்மூலம் இந்தப்பெயர் வடிவேலு படத்துக்கா? சதீஷ் படத்துக்கா? என்கிற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது.











