சினிமா செய்திகள்

சூர்யாவுக்கு எதிர்ப்பு ஆர்யாவுக்கு ஆதரவா? – திரைமறைவில் நடக்கும் சர்ச்சைக்குரிய விவாதம்

ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக இணையதளத்தில் வெளியானது சார்பட்டாபரம்பரை படம். பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா,பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் சார்பட்டா பரம்பரை.இப்படம் ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக இணையதளத்தில் வெளியானது.

அதேசமயம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கவேண்டிய படம் என்றும் படக்குழுவினர் பணத்துக்காக தப்பு செய்துவிட்டனர் என்கிற குற்றச்சாட்டுகளும் உலாவந்தன.

இந்நிலையில், இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடவும் படக்குழு முயற்சி எடுத்துவருகிறது.

இப்படத்தைத் தமிழ்நாடெங்கும் திரையரங்குகளில் வெளியிடும் பொறுப்பை ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டிருக்கிறதாம்.

இதுதொடர்பாக படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிட்ட நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி திரையரங்குகளில் வெளீயிடும் அனுமதியைப் பெறும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தைத் திரையரங்குகளில் திரையிட அனுமதிக்கக்கூடாது என திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

திரையரங்குகளை விட்டுவிட்டு நேரடியாக இணையத்தில் படங்களை வெளியிடுவதால் திரையரங்குத் தொழிலே அழிந்துவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே அப்படிச் செய்பவர்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் எவ்விதத்திலும் ஆதரவு தரக்கூடாது என்பது அவர்கள் வாதம்.

ஏற்கெனவே, சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை இதுபோல் திரையரங்குகளில் வெளியிட முயன்றபோது ஒட்டுமொத்த திரையரங்கு உரிமையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து அதைச் செய்யவிடாமல் தடுத்துவிட்டனர்.

இப்போது ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படத்துக்கு திரையரங்கு உரிமையாளர்களில் ஒரு தரப்பினர் அப்படத்தை வெளியிட ஆதரவு தெரிவிக்கின்றனர். இன்னொரு தரப்பினர் சூர்யா படத்தை வெளியிட ஒற்றுமையாக ஒரேகுரலில் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இப்போது ஆரயா படத்துக்கு ஆதரவு தெரிவிப்பதேன்? திரையரங்குத் தொழில் நல்லபடியாக இருக்கவேண்டுமெனில் இதுபோன்ற படங்களுக்கு எக்காலத்திலும் ஆதரவு தரக்கூடாது என்று சொல்லிவருகின்றனர்.

என்ன நடக்கிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts