சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் வாணிபோஜன் நடிக்கும் படம் இன்று தொடக்கம்
நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் 2டி எண்டர்டெயிண்ட்மெண்ட்.இந்நிறுவனம், ’36 வயதினிலே’ படம் தொடங்கி சமீபத்திய ‘சூரரைப் போற்று’ படம் வரை தயாரித்துள்ளது. தற்போது அந்நிறுவனத்தின் 14 ஆவது தயாரிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் இன்று ஆரம்பமானது.
இதில் படக்குழுவினருடன் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கச் செயலாளர் ஆர்.ரவி கிருஷ்ணன், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், சக்தி பிலிம் பேக்டரி பி.சக்திவேலன், கலரிஸ்ட் பாலாஜி கோபால், இயக்குநர் ஜே. ஜே ஃபிரடெரிக் உள்ளிட்ட பலர் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கலந்து கொண்டனர்.
இந்தப் படத்தில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை வந்து, அனைவரது மனதையும் கொள்ளைக் கொண்ட ரம்யா பாண்டியன் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அவருடன் இணைந்து பல்வேறு படங்களில் தன் நடிப்பால் முத்திரை பதித்து வரும் வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும், இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் மித்துன் மாணிக்கம். இவர்களுடன் இணைந்து ‘கோடங்கி’ வடிவேல் முருகன், செல்வேந்திரன் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சுகுமார் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரியவுள்ளார்.பின்னணி பாடகர் க்ரிஷ், இந்தப் படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.











