September 18, 2021
சினிமா செய்திகள்

பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழகமெங்கும் மாஸ்டர் படம் நிறுத்தமா? – நடந்தது என்ன?

விஜய்,விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான மாஸ்டர் படம் சனவரி 133 ஆம் தேதி வெளியானது. கொரோனா சிக்கலால் மூடப்பட்டிருந்த திரையரங்குகளுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்திய அந்தப்படம் பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் ‘மாஸ்டர்’ படத்தைத் திரையரங்கில் வெளியிட்டதால் மட்டுமே மக்கள் மீண்டும் திரையரங்கிற்கு வரத் தொடங்கியதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில்,திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே சனவரி 29 ஆம் தேதி அமேசான் ப்ரைம் இணையதளத்தில் வெளியானது ‘மாஸ்டர்’.

திரையரங்கில் வெளியான 16 ஆவது நாளில் இணையதளத்தில் வெளியிட்டு இருப்பதால், இப்படத்தின் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கடும் கோபத்துக்கு ஆளானார்கள். இதனால் சர்ச்சை உருவானது.

பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழகமெங்கும் அனைத்துத் திரையரங்குகளிலும் மாஸ்டர் திரைப்படம் நிறுத்தப்படவிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இதுதொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் கூட்டம் மற்றும் தயாரிப்பாளர்கள் – திரையரங்க உரிமையாளர்கள் கூட்டுக்கூட்டம் ஆகியன தனித்தனியாக நடைபெற்றன.

பல கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் இரு தரப்புக்கும் சமரசம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதன்படி, இப்படத்தின் இரண்டாவது வார வசூலில் ஒப்பந்தத்தைவிட பத்து விழுக்காடு குறைவாக வாங்கிக் கொள்வதெனவும் மூன்றாவது வார வசூலில் தயாரிப்பாளருக்குப் பங்கு வேண்டாம் எனவும் சொல்லப்பட்டிருக்கிறதாம். நான்காவது வாரத்தில் வழக்கம்போல பங்கு தரப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதோடு, பெரிய பட்ஜெட் படங்களை திரையரங்குகளில் வெளியான 50 நாட்களுக்குப் பிறகே இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், சிறு பட்ஜெட் படங்களை 30 நாட்களுக்குப் பிறகு வெளியிடவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனால் மாஸ்டர் படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடும் என்கிறார்கள்.

Related Posts