அருண்விஜய் ஹரி கூட்டணி – துணிந்து முன்வந்த தயாரிப்பாளர்
மார்ச் 1,2020 மாலை 4 மணிக்கு சூர்யா 39 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.அதன்படி,சூர்யாவின் 39 ஆவது படத்தின் இயக்குநர் ஹரி. அந்தப்படத்துக்கு அருவா என்று பெயர் வைக்கப்பட்டது.
அந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.படத்துக்கு இசை இமான். முதன்முறையாக அவர் சூர்யா படத்துக்கு இசையமைக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்றும், 2020 தீபாவளி வெளியீடு என்றும் அறிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 6 ஆம் தேதி படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு தயாரானதாம். கொரோனா ஊரடங்கு காரணமாக அது தள்ளிப் போய்விட்டது என்று சொன்னார்கள்.
அதன்பின், ஹரி உருவாக்கிய திரைக்கதையைக் கேட்ட சூர்யா, எல்லாமே பழைய காட்சிகளாக இருக்கின்றன எனவே மொத்தமாக மாற்றுங்கள் என்று சொல்லிவிட்டாராம்.
இதனால் சூர்யா மீது கோபமாகிவிட்டாராம் இயக்குநர் ஹரி.இதனால் அந்தக் கதையை அப்படியே வைத்து தன் மைத்துனர் அருண்விஜய்யை வைத்து அந்தப்படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார்.
அருண்விஜய் படங்களிலேயே அதிகப் பொருட்செலவு பிடிக்கும் படம், அருண்விஜய்யின் சந்தை மதிப்பைத் தாண்டிய செலவு பிடிக்கும் என்பதால் இப்படத்தைத் தயாரிக்கப் போவது யார்? என்கிற கேள்வி இருந்துவந்தது.
இப்போது அதற்கு விடை கிடைத்திருக்கிறது. அருண்விஜய் நடித்த தடம், குற்றம் 23 ஆகிய படங்களைத் தயாரித்த இந்தர்குமார் இப்படத்தைத் தயாரிக்க முன்வந்திருக்கிறாராம்.











