ஜகமே தந்திரம் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான படம் ‘ஜகமே தந்திரம்’.இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் ‘ஜகமே தந்திரம்’ படத்தைத் தயாரித்திருக்கிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இதனிடையே இந்தப் படம் நேரடியாக இணைய தளத்தில் வெளியாகப்போவதாக அவ்வப்போது தகவல் வெளீயாகும்.
அப்போதெல்லாம், தனுஷ் படங்களில் இந்தப் படத்தின் செலவு அதிகம். இலண்டனிலேயே பெரும்பகுதிப் படப்பிடிப்பு மற்றும் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவுடன் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.அதனால் அதிகச் செல்வு ஆகியுள்ளது. ஆகையால், இந்தப் படம் திரையரங்கில் வெளியானால் மட்டுமே சரியாக இருக்கும். ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு வாய்ப்புகள் குறைவு என்று சொல்லப்பட்டுவந்தது.
இந்நிலையில் இந்தப்படத்தை முன்னணி இணையநிறுவனம் அண்மையில் பார்த்துள்ளது. அவர்களுக்குப் படம் பிடித்திருந்தால் படக்குழு சொல்லும் விலை ஒத்துவந்தால் படத்தை அவர்கள் நேரடியாக இணையத்தில் வெளியிடும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.
இது தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறதாம். முடிவு என்னவாகுமோ?











