சினிமா செய்திகள்

பொன்னர் சங்கர் வழியில் பொன்னியின் செல்வன் – மணிரத்னம் புதுமுடிவு

மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் புதுச்சேரியில் சில நாட்கள் நடந்ததது.

அவற்றைத் தொடர்ந்து வடமாநிலங்களில் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனோ வைரஸ் சிக்கல் காரணமாக வடமாநிலங்களில் படப்பிடிப்பு நடத்த இயலவில்லை. அதனால், ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் படப்பிடிப்புத் தளத்தில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டனர்.அங்கும் படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டன.

அதனால் பொன்னியின் செல்வன் வேலைகளும் நின்று போயின.

இப்போது மீண்டும் அப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிடுகிறார்களாம். இம்முறை ஐதராபாத்திலோ வடமாநிலங்களிலோ படப்பிடிப்பை நடத்தாமல் தமிழகத்துக்குள்ளேயே படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடுகிறார்கள்.

அதற்காக கலைஞரின் பொன்னர் சங்கர் படத்தின் படப்பிடிப்புகள் நடந்த இடங்களைப் பார்வையிட்டு அங்கே அரங்குகள் அமைத்துப் படப்பிடிப்பு நடத்தவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதற்காகப் பல இடங்களைப் பார்வையிட்ட பின்பு இயக்குநர் மணிரத்னத்திடம் விரிவான அறிக்கை கொடுத்திருக்கிறாராம் கலை இயக்குநர் தோட்டாதரணி.

மணிரத்னமும் அதற்கு ஒப்புதல் அளித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறதென்றும் அதுவும் தமிழகத்திலேயே படப்பிடிப்பு நடத்தவிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

Related Posts