காலா படத்துக்கு எதிராக சதி – தயாரிப்பாளர் திடுக் தகவல்
கபாலி பட விநியோகத்தில் நட்டம் என்பதால் பணம் தருவதாகச் சொல்லி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ஏமாற்றிவிட்டார், அவர் பணம் தரவில்லையெனில் தற்கொலை செய்வேன் என ஜி.பி. செல்வகுமார் என்பவர் தீடீர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இது தொடர்பாக மார்ச் 5 அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு விளக்கமளித்துள்ளார். அதில்…
ஜி.பி.செல்வகுமாருக்கும், கபாலி படத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை செல்வகுமார் கபாலி படத்தை வாங்கவில்லை, விநியோகஸ்தர் வேணுகோபாலுக்கு சாட்சிக் கையழுத்து போட வந்தவர் தான் செல்வக்குமார்.அவர் அழைத்து வந்த வேணுகோபால் என்பவர் தான் வாங்கினார். அவருக்கும் எனக்குமான பணபரிவர்த்தனைகள் வெளிப்படையாகவும்,நேர்மையாகவும் நடந்து வந்திருக்கின்றன.
இது வரை,சேலம் பகுதியில் அவர் தியேட்டர் எடுத்த வகையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் அவருக்கு, ரூ 61 லட்சம் அவருக்குக் கொடுத்திருக்கிறேன்.
கபாலி படம் நஷ்டம் என கூறுவது முற்றிலும் பொய். கபாலி மாபெரும் வெற்றிப் படம், சென்னையில் மட்டுமே 13 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது தயாரிப்பாளரான நானே சொல்கிறேன் படம் வணிகரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
யாருக்காவது ஒரு கஷ்டம் என்றால் அவர்களை அழைத்து பிரச்னையை கேட்டு உதவி செய்வது சூப்பர்ஸ்டார் ரஜினியின் பழக்கம்,அதைப் பயன்படுத்தி ரஜினியை ஏமாற்றத்தான் தான் கபாலி நஷ்டமென்று சர்ச்சைகளை உருவாக்குகிறார்கள்.
இவ்வளவு நாட்கள் இல்லாமல் தற்போது கபாலி படம் நஷ்டம் என்று பொய்களை கூறக்காரணம், ரஜினி சாரின் காலா படம் வெளியாகவிருப்பதுதான். அதை முன்னிட்டுத் தேவையில்லாத குழப்பத்தை ஏற்ப்படுத்த சதி செய்கிறார்கள். கடைசியில் நீதியே வெல்லும்
இவ்வாறு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கூறினார்.










