முன்னோட்டத்தின் மூலம் நம்பிக்கையை உருவாக்கிய ரைட்டர்
அறிமுக இயக்குநர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ரைட்டர் திரைப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் நேற்று முன் தினம் வெளியானது. திரைப்பட இரசிகர்களை மட்டுமல்லாது பலரையும் இந்த முன்னோட்டம் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இப்படத்தில் காவல்துறையில் எழுத்தர் (ரைட்டர்) பணிபுரியும் கதாபாத்திரமாகத் தோன்றுகிறார் சமுத்திரக்கனி. காவல்நிலையத்தில் உள்ள ரைட்டர்களின் வலியை இயக்குநர் அழுத்தமாகப் பதிவு செய்திருப்பதை படத்தின் முன்னோட்டத்தில் காண முடிகிறது.
‘போலீஸ் பத்தி அவதூறு பரப்பவே ஒரு கூட்டம் இருக்கு’… ‘காக்கிகளின் சாம்ராஜ்யத்தில் தமிழகம்; மலிந்து கிடக்கும் மனித உரிமை’ உள்ளிட்ட பல வசனங்கள் தற்கால வாழ்வியலில் நடக்கும் ஒரு வலியை வெளிக்கொண்டுவரும் படமாக “ரைட்டர்” இருக்கும் என்று சொல்கிறது.
பலரின் எதிர்பார்ப்பையும் நாளுக்கு நாள் எகிற வைத்துக் கொண்டிருக்கும் இந்தத் திரைப்படம் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் வெளியீடாக இம்மாதம் 24ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய பா இரஞ்சித் தொடர்ந்து பல தரமான படங்களை மக்களுக்கு படைத்து வருகிறார்.அந்த வரிசையில் இந்தப்படமும் சேரும் என்கிற நம்பிக்கை முன்னோட்டத்தின் மூலம் உருவாகியிருக்கிறது.











