October 25, 2025
கட்டுரைகள்

விவேக் – காலமும் கலைஞனும் – ஓர் ஆழமான சிறப்புக்கட்டுரை

நேற்று முன் தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்த நடிகர் விவேக் நேற்று (ஏப்ரல் 17,2021) அதிகாலை 4.35 மணியளவில் திடுமென மறைந்தார். திரையுலகினரையும் திரைப்பட இரசிகர்களையும் அவரது இறப்பு பேரரதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

அவரது மறைவைத் தொடர்ந்து அவருக்குப் புகழ்வணக்கம் செய்யும்விதமாகப் பல்வேறு பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து மாறுபட்ட பார்வையில் விவேக்கின் ஆளுமைத்திறனை மட்டுமின்றி அவர் செய்த பிழையையும் சுட்டும் விதமான ஆழமான கட்டுரை ஒன்றை இயக்குநர் தங்கம் எழுதியிருக்கிறார்.

விவேக்கின் பெருமைக்குச் சிறப்புச் சேர்க்கும் அக்கட்டுரை….

‘நகைச்சுவை நடிகர்’ என்று, தனது தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் நடிகர் விவேக். அவர், வெறும் நடிகர் மட்டும்தானா? அல்ல, நடிப்புத் திறனுக்கும் அப்பால் படைப்பாற்றல் கொண்டு இயங்கியவர். கதையறிவோடு திரைக்கதை நுட்பங்களும் வாய்க்கப் பெற்றிருந்தார்.

ஒரு கதைக் கருவானது கதையாக வடிவுற வேண்டுமாயின் கதையின் மைய முரண்கள் வலுவுற்றிருத்தல் வேண்டும். மைய முரண்கள் வலுவுற்றிருந்தால் அந்த வலிமையைத் தாங்கி நிற்பதும், மைய முரண்கள் வலுவற்றிருந்தால் அவற்றின் வலிமையைக் கூட்டுவதும் – துணை முரண்களின் இயல்பு; துணை முரண்களின் பிறப்பு நோக்கம். மைய முரண்களின் பயணப்
பாதையைச் சமைக்கவும், பயணப் பாதையைச் செம்மைப்படுத்தவும் துணை முரண்கள் இயங்குகின்றன. மைய முரண்களுக்கும், துணை முரண்களுக்கும் இடையேயான தர்க்கப்பிணைப்பு முறைமையை – ‘திரைக்கதை’ என்கிறோம்.

மைய முரண்களுக்கும் துணை முரண்களுக்கும் இடையேயான உறவுப் பிணைப்பானது இலக்கியத்தின் பெருங்கதை வடிவான புதினத்தில் போல அமையாது திரைக்கதையில். மைய முரண்களையும், துணை முரண்களையும் பிணைக்கிற முறைமையானது புதினக் கட்டமைப்பிலும், திரைக்கதைக் கட்டுமானத்திலும் வேறு வேறு இலக்கணங்களால் ஆளப்படுபவை.

ஒரு திரைக்கதையில் மைய முரண்களும், துணை முரண்களும் உறவுப் பிணைப்பு மேற்கொள்ளும்போது பிறப்பெடுக்கிற கிளை முரண்கள், மூன்றாவது வகையான முரண்களாகும். கிளை முரண்கள் என்பவை, கதைவெளியின் புறப் பகுதியில் தமது தோற்றத்தைக் காட்டியும் காட்டாது இருப்பு கொண்டிருக்கக்கூடும்.

இருந்தபோதிலும் கிளை முரண்களைக் கண்டறிந்து, அந்த முரண்களுக்குள் விழிக்கத் தயாராகக் கிடந்துறங்குகிற கேள்விகளின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி, தர்க்கப்படியான விடையளித்து, ஐயங்களை உறங்கச் செய்யவேண்டும். கிளை முரண்களை இவ்வாறு திறம்படக் கையாளுவதைத்தான் Treatment என்று சொல்லுகின்றனர் திரைக்கதைக் கோட்பாட்டாளர்கள். Treatment என்பது, கல்லடுக்குகளின் சந்தில் நுழைக்கப்படுகிற ஒற்றி போல. இவைதான், கட்டமைப்பின் உறுதியைத் தீர்மானிப்பவை.

மைய முரண்கள், துணை முரண்கள், கிளை முரண்கள் ஆகிய மூவகை முரண்களின் இயக்கங்களையும் செம்மையாகக் கையாளும்பொழுது வலிமையான திரைக்கதை வடிவுறுகிறது.வலிமையான  திரைக்கதையானது அடிப்படையில், கதையின் மைய முரண்களை வலிமைப்படுத்துவதாகும்.

மைய முரண்களாவன, திரைக்கதையில் வெளிப்படுகிற பலவகைக் கருத்துகளுள் சிறப்பானதொரு கருத்தை அல்லது புதுமை மிக்கதொரு கருத்தை மையக் கருத்தாகப் பிறப்பிக்கின்றன;திரைக்கதையில் வெளிப்படுகிற பலவகை உணர்ச்சிகளுள் சிறப்பானதொரு உணர்ச்சியை அல்லது புதுமை மிக்கதொரு உணர்ச்சியை மையவுணர்ச்சியாகப் பிறப்பிக்கின்றன.

அல்லது, மைய முரண்களாவன, திரைக்கதையில் வெளிப்படுகிற பலவகைக் கருத்துகளுள் சிறப்பானதொரு கருத்திலிருந்து அல்லது புதுமை மிக்கதொரு கருத்திலிருந்து பிறந்தவை;. அதே போல் மைய முரண்களாவன, திரைக்கதையில் வெளிப்படுகிற பலவகை உணர்ச்சிகளுள் சிறப்பானதொரு உணர்ச்சியிலிருந்து அல்லது புதுமை மிக்கதொரு உணர்ச்சியிலிருந்து பிறந்தவை; மைய முரண்களைப் பிறப்பிக்கிற கருத்தே கதையின் மையக் கருத்தாகிறது என்பதையும், மைய முரண்களைப் பிறப்பிக்கிற உணர்ச்சியே, கதையின் மையவுணர்ச்சியாகிறது என்பதையும் முந்தைய பத்தியில் கண்டோம்

வலிமையான கருத்துருவம், பேருணர்ச்சி, கொதி முரண் – இந்த முக்கூட்டுக் கலவைதான்,திரைக்கதையின் தண்டுவடமாகிறது. இந்தத் தண்டுச் சுவை எதுவோ அந்தச் சுவை கொண்டு, அந்தத் திரைப்படத்தின் வகைமை கொள்ளப்படுகிறது.

காதல் படம், சண்டைப் படம், குடும்பப் படம், திகில் படம், மர்மப் படம், துப்பறியும் படம், இன்ன பிறவகைப் படங்கள்; இவற்றுள் ஒரு வகைதான் நகைச்சுவைப் படம் எனப்படுகிற வகைமை. பிற சுவை வகைமைகளுள், நகைச்சுவைக்கென்று தனித்ததொரு தடம் திரைக்கதையில் சமைக்கப்பட்டிருக்கும். அந்தத் தடத்தில், நகைச்சுவை உருவாக்கத்திற்கென்று பிறப்பிக்கப்பட்ட முரண்கள் இயக்கம் பெற்று, துணைப் பனுவலைத் தோற்றுவிக்கின்றன.

துணைப் பனுவலுக்கும், முதன்மைப் பனுவலுக்கும் பொதுவான கூறுகளே இரண்டு பனுவல்களிலும் முரண்களை உற்பவிக்கின்றன என்று கொள்வோம். அப்பொழுது,திரைக்கதைக்கென்று ஓருணர்ச்சி வாய்த்துவிடுகிறது. ஒரு வேளை, . துணைப் பனுவலுக்கும்,
முதன்மைப் பனுவலுக்கும் பொதுமை உண்டாக்காத கூறுகளே இரண்டு பனுவல்களிலும் முரண்களை உற்பவிக்கின்றன என்று கொள்வோம். அப்பொழுது, திரைக்கதைக்கென்று ஓருணர்ச்சி வாய்க்காமல் போய்விடுகிறது. படம் தோல்வியடைகிறது.

நகைச்சுவைக்கான தடத்தில் துணைப் பனுவலைப் படைக்கும் பொறுப்பை விவேக் ஏற்றுக்கொண்டாரெனில், துணைப் பனுவலுக்கும் முதன்மைப் பனுவலுக்குமான பொதுமைக் கூறுகளை முதலில் அவர் கணக்கில் கொள்கிறார். பின்னர்தான் நகைச் சுவைத்த்திற்கான
துணைப் பனுவலை உருவாக்குகிறார். அந்தப் படமானது எந்த வகைமையானதாக இருந்தபோதிலும், எந்த உணர்ச்சியை மையவுணர்ச்சியாகக் கொண்டிருந்தபோதிலும், எந்தக் கருத்தை மையக் கருத்தாகக் கொண்டிருந்தபோதிலும் – விவேக்கின் துணைப் பனுவல் பொருந்திப் போகும். துணைப் பனுவலை அவ்வகையாக உருவாக்கத் தெரிந்த கலைஞராவார் விவேக். நகைச்
சுவை நடிப்பை வெளிப்படுத்துகிற நிகழ்த்துகலைஞராக மட்டுமின்றி, நகைச்சுவைப் பனுவலை உருவாக்குகிற படைப்புக் கலைஞராகவும் திறம்பட இயங்கினார்.

திரைப்பட வகைமைகளுள் நகைச்சுவைப் படத்தை உருவாக்குவதுதான் மிகச் சவாலானதாகும்.மற்ற வகைமைகளில், நகைச்சுவை ஒரு போக்காக, தனித்த போக்காக, ஓடிக்கொண்டிருப்பது.அந்தத் தனித்த பாதையில் இயங்குவதற்கு என்று தனியான முரண்கள், தனியான மாந்தர்கள்,தனியான கதைப் போக்குகள் ஆகியவை உண்டு. அவைதான் துணைப் பனுவலை உற்பவிக்கின்றன என்று கண்டோம். முழு நீள நகைச்சுவைத் திரைப்படம் என்பது மிகச் சவாலானதாகும்.

நகைச்சுவை என்பது முரண்களின் மிகையியக்கம். முரண்களின் மிகையியக்க நிலையில்தான் நகைச்சுவைணர்வு பிறப்பிக்கப்படுகிறது. இந்த மிகையியக்க நிலையை உருவாக்குதல் மிகக்கடினமான படைப்புச்செயலாகும். முரண்களின் ‘இயல்பியக்க நிலை’ குறித்து அறிந்திருக்கிற ஒருவரால்தான், மிகையியக்க நிலையினை உருவாக்கிக்காட்ட முடியும். மேலும், இதுவொரு
கலையுத்தி என்றாலும், ‘கலையுத்தி மட்டும்தானா?’ என்று கேட்டுப்பார்த்துக் கொள்வோம். அல்ல; இதுவொரு உளநிலை. 

வாழ்க்கையில் எதிர்ப்படுகிற அனுபவங்களை விருப்பு வெறுப்பின்றி ஏற்கப் பழகவேண்டும்.மகிழ்ச்சியோ துயரமோ எது நடந்தாலும் அந்த அனுபவத்தைக் கதைக்கான கச்சாப் பொருளாக ஏற்கப் பழக வேண்டும்.கதையாக மாற்றத் தெரியவேண்டும். மிகப்பெரும் துயரத்தை உண்டு பண்ணுகிற ஒரு நிகழ்ச்சி என்று வைத்துக் கொள்வோம்,அந்த நிகழ்ச்சியை  உற்பவித்த முரண்களின் பண்புகளைப் பிரித்தாய்ந்து, பண்பு வேறுபாடுகள் காரணமாக எழும்புகிற  முரணியக்கத்தின் வரைபடத்தைத் தயாரித்து, நிகழ்வு
உருவாகிவந்த வகையைப் புரிந்துகொள்ளவேண்டும்.

இன்னின்ன முரண்கள் இன்னின்ன வகையாக இயக்கம் கொள்ளுகையில் இன்ன விதமான நிகழ்வு உருவாகி வந்திருக்கிறது என்று புரிந்துகொள்ளவேண்டும்.இந்த அனுபவ அறிவைக் கொண்டு புனைவுலக மாந்தரது வாழ்வில் இன்ப துன்ப விளையாட்டுகளை ஆடிப்பார்க்க வேண்டும்.

அந்தப் புனைவை மக்கள் முன்னிலையில் வைத்து மக்களுக்குள் இன்ப துன்ப இன்னபிற உணர்வுகளை உண்டாக்கி மக்களது உள்ளங்களைத் தன் கட்டளைப்படி ஆட்டுவிக்க வேண்டும். எவ்வளவு பெரிய துயரம் நிகழ்ந்தாலும் இந்த வாழ்க்கைக்கு நன்றி சொல்ல வேண்டும்.இப்படியொரு அனுபவத்தைக் கதையாகச் சொல்லிவிட வேண்டும் என்ற முனைப்புடன் அந்த அனுபவத்தைப் புடம்போட வேண்டும்.

இப்படியாக வாழ்க்கையிலிருந்து வாழ்க்கையைக் கற்றுக் கொண்டு புனைவுலக மாந்தரது வாழ்வை உருவாக்கவேண்டும்.வாழ்க்கையையே புனைவாக வாழ முடியவேண்டும்.கனவில் தனது பிணத்தைப் பார்ப்பது போல. ஒட்டுதலின்றித் தனது வாழ்க்கையைக் காணவேண்டும்.

வாழ்க்கைக்கும் புனைவுக்குமான எல்லைக்கோடுகளை அழித்தொழித்த நிலையில்தான் ஒருவன் முழுமையான திரைக்கலைஞன் ஆகிறான்.திரைப்படம் என்று சொல்லிக்கொண்டு வெறும் டெக்னிக்கை கற்றுக்கொள்வதென்பது பொம்மைக்குத் தாலிகட்டிக் குடும்பம் நடத்துகிற கூத்தாகிவிடும்.    
 
அனுபவங்களை விளைவிக்கிற முரண்கூறுகளுள், மிகைப் பண்பு, நாடகீயப் பண்பு, வியப்பான திருப்பம், எதிர்பாராத விளைவு,
பொருந்தாக் களம் ஆகியனவற்றுள் ஏதொன்றாகினும் தட்டுப்படுகிறதா? என்று இடையறாத விழிப்புடன் வாழ்வனுபவங்களைக் க்ண்டுவரவேண்டும்.அப்படியான கூறுகள் தட்டுப்படுகிற தருணத்தில் தனக்குள்ளிருந்து நகையுணர்வு பூப்ப்தற்குத் தயார் நிலையில் உள்ளத்தை வைத்திருக்க வேண்டும்.

பின்னர் அப்படித் தட்டுப்படுகிற கூறுகளைக் கொண்டு புனைவுலகில் கதையசைவுகளைக் காட்சிகளுக்குள் உண்டாக்கவேண்டும். இவையெல்லாம் சரிவர நிகழ்ந்தால், பார்வையாளருக்குள் நகைச்சுவையுணர்வு தூண்டப்படும். நகைச்சுவையுணர்வின் கிளர்ச்சியை உண்டுபருகத் தெரிந்த உள்ளத்தினால்தான் இது ஆகக்கூடும். அப்படியொரு உள்ளத்தைத் தமக்குள் உருவாக்கி வைத்துக்கொள்வதென்பது நகைச்சுவைப் படைப்பாற்றலுக்கு முதன்மையானது.

‘அப்படியொரு உள்ளம்’ என்பது, ‘அப்படியொரு ஆளுமை’ என்று பொருள்படும். அப்படிப்பட்ட ஆளுமைதான்,
வாழ்க்கையில் நேர்கொள்கிற நிகழ்வுகளுக்குள் பொதிந்திருக்கிற நகைச்சுவைக் கூறுகளைப் பிரித்தறிகிற கலைத் திறன் கொண்டது. இந்தத் திறன் கைகூடி வந்திருக்கிற சிறப்பானதொரு ஆளுமைதான் ‘சின்னக் கலைவாணர்’ விவேக்.

நகைச்சுவைப் படைப்பாற்றல் கைவரப் பெறுவதற்கு மிக நீண்ட பயிற்சி தேவை. பயிற்சியின்
விளைவாகத்தான் ஆளுமையாக உருப்பெற முடியும்.

அதுவரை காலம் பயின்றுவந்து உருவாக்கி வைத்திருக்கிற ஆளுமையைச் சிதைக்கும்படியான நிகழ்ச்சிகளை, வாழ்க்கை உருவாக்கியனுப்பும். ஆனாலும் ஆளுமை மாற்றம் ஏற்பட்டுவிடாதவாறு ஆளுமையைப் பேணிக் காத்திடல் வேண்டும். நகைச்சுவைப்
படைப்பாளிகளின் வலி மிகுந்த பகுதியிது.

‘ஆளுமைச் சிதைவை ஏற்படுத்துமளவு வாழ்க்கையால் தாக்குண்ட போதிலும், ஆளுமைச் சிதைவுக்கு ஆட்படாமல் இந்த வாழ்க்கையை நகைச்சுவை உணர்வுடனேயே வாழ்ந்து பார்ப்பேன்’ என்று, அடம் பிடிப்பார்கள் நகைச்சுவைப் படைப்பாளிகள். அத்தகு தருணத்தில் வாழ்க்கை உருவாக்க முனைகிற ஆளுமையும், கலைஞன் பேணிக் காக்க நினைக்கிற ஆளுமையும் வேறு
வேறானவை என்பதால் வலிமிகுந்த முரணை எதிர்கொள்கிறார் நகைச்சுவைப் படைப்பாளி. வாழ்க்கையின் அப்படிப்பட்ட தாக்குதல் காலகட்டத்தில்கூடத் தனது நகைச்சுவை ஆளுமையை
பேணிக்காத்து வந்தவர் விவேக்.

அவருடைய நகைச்சுவை, வெறும் நகைச்சுவை அல்ல. அதே நேரத்தில், திரைப்படக் கட்டமைப்புக்கு வெளியே துருத்திக் கொண்டிருக்கிற பொருந்தாப் பொருளும் அன்று!

அவர் முதலில் ஒரு கதையின் மைய முரண்களை ஆழ்ந்து கற்கிறார். பின்னர் துணை முரண்களின் இயல்புகளைப் புரிந்து கொள்கிறார். மைய முரண்களுக்குள் கிடக்கிற மிகைப் பண்பு, நாடகீயம்,வியப்பான திருப்பம், எதிர்பாரா விளைவு போன்றவற்றைக் கணக்கிலெடுக்கிறார். கதை உருவாக்கம், கதை வளர்ச்சி, கதைத் திருப்பம், கதை வியப்பு ஆகியனவற்றை உற்பவிக்கக்கூடிய
கூறுகளைப் பட்டியலிடுகிறார். அதேபோல, துணை முரண்களையும் ஆய்ந்து பார்க்கிறார். கதை நாயகனின் துணையாளாக வேடமேற்கும்பொழுது, மைய முரண்களோடு உருண்டு புரண்டு விளையாடுவார் விவேக்.

மைய முரண்களுக்குள் கிடக்கிற பொருந்தாப் பண்புகளை,பொருத்தமான தருணங்களில் பகடி பண்ணுவதில் அவர் ஒரு Master! கதை நாயகனோடு துணையாளாக வர முடியாமற் போனால், கதையின் துணை முரண்கள் இயக்கம் பெறுகிற களத்தில்தான் நகைச்சுவை நடிகருக்கு வேலை. அங்கு – துணை முரண்களின் இயங்கு களத்தில் – நகைச்சுவை நடிகரே கதை நாயகனாகத் தோன்றியெழும்புவார். அவரது இத்தகைய தோன்றுதல் என்பது பல நேரங்களில், முதன்மைப் பனுவலின் கதை நாயகனது தோன்றுதலையேகூட மங்கச்
செய்வதுண்டு. காரணம், நகைச்சுவையை மட்டுமே உற்பத்தி செய்யாமல், மைய முரணிலிருந்து பிறப்பெடுக்கிற கருத்தை / உணர்ச்சியை நகலெடுத்து – சில வேளைகளில் மைய முரண்களையேகூட நகலெடுத்து – புதிய துணைப் பனுவலைப் படைத்து விடுகிறார்.

துணைப்பனுவலில் வெளிப்படுகிற விவேக்கின் படைப்பாற்றல் எப்பொழுதுமே கதையின் மைய முரண்களோடு பிணைப்பு கொள்பவை. அதனால் திரைக்கதையின் ஒருமைத்துவம் (Oneness) பேணப்படுகிறது. இந்த ஒருமைத்துவமானது மொத்த்தத் திரைப்படத்திற்கு என்றொரு சீர்மையை உண்டாக்கிவிடுகிறது. அதனால் பார்வையாளர், ஆற்றொழுக்குடன் பயணப்படுகிற திரைக்கதையோடு இயைந்து பயணிக்கிறார்.

திரைக்கதைக் கட்டமைப்பு நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டதொரு நகைச்சுவை நடிகரால் மட்டுமே இவ்வாறாகத் தனது நகைச்சுவைப் பகுதியை ஒரு திரைக்கதையின் கட்டுமானத்திற்குள் துருத்தலின்றிப் பிணைத்திறுக்க முடியும். நகைச்சுவைப் பகுதியின் பொறுப்பை விவேக்கிடம் ஒப்படைக்காமல் தாமே படைத்துக்கொண்ட திரைக்கதை ஆசிரியர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்களது படங்களில்கூட Treatment டில் புகுந்து விளையாடுவார் விவேக்.

Treatment என்பது குறித்து முன்னரே பார்த்தோம். மைய முரண்களும், துணை முரண்களும் கூடி இயங்கும்பொழுது, கதையின் மையவுணர்ச்சி, மையக் கருத்து ஆகியன கடையலாகி, புதிய முரண்களைப் பிதுக்குகின்றன. இப்படிப் பிதுக்கம் பெறுகின்றவையே பக்க முரண்கள். பக்க முரண்கள் உருவாக்குகிற கேள்விகளுக்கு தர்க்கப் படியான விடையளிப்பதுதான் திரைக்கதையில்
Treatment எனப்படுகிறது. ஆங்கில அகராதி சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், தமிழில் இதை, ‘இசைமை கூட்டுதல்’ என்று கொள்ளலாம்.

இசைமை கூட்டுதலைத் திறம்படக் கையாளும்பொழுதில், ஒருமைத்துவம் வலுப்பெறுகிறது. விளைவாக, கதையைத் துய்க்கிற
பார்வையாளர் நிறைவுறுகிறார். திரைப்படத்திலிருந்து கவனம் பிசகிவிடாமல் படத்தைக் கண்டுகளிக்கிறார்.

திரைக்கதைக் கட்டமைப்பு நுணுக்கங்களைப் பயின்று, தனது நகைச்சுவை ஆளுமையோடு அவற்றைப் பொருத்தி, வாழ்க்கையை எதிர்கொண்டவர் விவேக். புதிய புதிய அனுபவங்களுக்கான விழைவுதான் சமூகத்தின் பல்வேறு தளங்களில் அவரைச் செயல்பட
வைத்தது. தனது நினைவின் அனுபவக் களத்தில் புதிய நினைவுகளை இட்டு நிரப்பிக்கொண்டே  இருந்தார். அந்த வகையில், அனுபவம் தீர்ந்து போகாதவராகத் தன்னை எப்பொழுதுமே புதுப்பித்துக்கொண்டே இருக்க முனைப்பெடுத்து வந்தார்.

நகைச்சுவைப் படைப்புத் திறனில் அவரது தனித்துவம் என்னவென்றால், அறிவுலகப் பார்வை
(Intellectual viewpoint).சூழல் சீர்மை, மரபு வேளாண் முறை, மரபுப் பயிரறிவு, இயற்கை வாழ்வு உள்ளிட்டவற்றில் புதிய
கண்டுபிடிப்பாளரும், மரபுணவுக்கு மக்களைத் திருப்பியவரும், பாசாங்கற்றவரும் – தமிழக மக்களின் தீரா நன்றிக்கு உரியவருமான கோ. நம்மாழ்வாரின் கருத்துகளை மக்களிடம் கொண்டுசேர்க்க முயன்றார். அறிவினத்தார் என்று விவேக் நம்பிய அப்துல் கலாமின்
கருத்துகளையும் மக்களுக்கு போதித்தார்.

பெரியாரிய, அம்பேத்கரியக் கருத்துகளையும் நகையுணர்வுக் கட்சிகளுக்குள் பொதித்து வைத்துக் கொடுத்தார். சாதி, மதம், இனம் போன்ற வேறுபாடுகள் மக்களுக்கிடையே இருந்து களையப்படவேண்டும் என்று விரும்பினார். மக்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி, அமைதி வாழ்வு கேற்கொள்ளவேண்டும் என்று விரும்பினார். அதனாலேயே, ‘புரட்சிகரம், முற்போக்கு’ என்றெல்லாம் உருவாகி வந்திருந்தவற்றை வெகுமக்கள் களத்திற்குக் கொண்டுசேர்த்தார். 

இவ்வகையில், குமுகாய அக்கறைகொண்ட கலைஞராகத் தொழிலாற்றினார்; தொண்டாற்றினார். ஆனால், 21ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தின் புதிய முரண்களாக விளைந்து வந்தவை எவையெவை என்று காணத் தவறிவிட்டார். அவரது அக்கறை
தூய்மையானது; ஆனால் அவரது அரசியல் பார்வை பழுதுற்றது. எடுத்துக்காட்டாக அப்துல் கலாம் குறித்து அவருக்கிருந்த பார்வையை எடுத்துக்கொள்வோம்.

அப்துல் கலாம் பார்ப்பனியத்தால் தேர்ந்தெடுத்து உருவாக்கப்பட்டதொரு தென்முனைக் குறியீடு. அவரொரு இசுலாமியர் என்பதுவும், தமிழர் என்பதுவும், துணைக் கண்டத்தின் தென்கோடியில் அமைந்திருக்கிற ராம-ஈசுவரத்தைச் சார்ந்தவர் என்பதுவும், தாமாகி வந்தவையல்ல; அவற்றுக்கு அடியில் தீர்க்கமான நூற்றாண்டு அரசியல் பார்வை கமுக்கமாகக் கிடக்கின்றன. நேருக்கு நேர்
எதிர்ப் பார்வை கொண்ட திருக்குறளையும் கீதையையும் ஒன்றுபோலக் கண்டார் அப்துல் கலாம். இரண்டையும் ஒன்றுபோலப் புகழ்ந்தார்.

கீதை, வருணாச்சிரமப் படிநிலையை நிறுவுவதற்கு உரிய நூல். மட்டுமின்றி, மட்டுமின்றி, மட்டுமின்றி என்று நிறைய எழுதலாம்… வேண்டாம்!

ஈழத்தமிழினம் முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்ட பொழுதில், முன்னாள் குடியரசுத் தலைவராகிய அப்துல் கலாம் பேசா மடந்தை எனக் கிடந்தார். வீடு தீப்பற்றி எரியும்பொழுது பகட்டான மேடையிலமர்ந்து வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற விலைமிகு அலங்கார பொம்மையெனத் தமிழ் நிலத்தில் அவர் இருந்தார். டெல்லியின் தமிழின
அழிப்புக்கு எதிராகத் தனது குரலை அவர் முழங்கியிருந்திருப்பாரேயானால், போர் திசைமாறியிருந்திருக்கும். முன்னாள் குடியரசுத் தலைவரின் குரல் என்பதால், அந்தக் குரல் முன்வைக்கிற பார்வையை உலகம் பொருட்படுத்தி இருந்திருக்கும். ஆனால் அப்துல் கலாம் அதைச் செய்தாரில்லை.

பார்ப்பனீயத்தின் நெடுங்காலத் திட்டத் தொடராகிய அகண்ட பாரதக் கனவை நிறைவேற்றித் தருகிற எடுபிடியாகத்தான் அவரிருந்தார். அப்துல்கலாமின் அடிப்படைகள் அனைத்துமே தவறானவை என்பதுவும், இஸ்லாமிய மக்களின் உரிமைகளுக்குக் கூட பங்கம் விளைவிக்கக் கூடியவை என்பதுவும் அப்பட்டமான உண்மைகள். ஆனால், ‘அப்துல் கலாம் பீடிப்பு’ என்கிற பிணியிலிருந்து விவேக்கினால் விடுபட முடியவில்லை.

சுருங்கச்சொன்னால், 21ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தின் புதிய முரண்கள் எவையெவை என்று காணத் தவறிவிட்டார். அவ்வகையில், கயிற்றின் மேல் நடப்பவர் கயிற்றுப் பயணத்திலிருந்து நழுவி விழுவதுபோல, ஓடிக்கொண்டிருக்கும் வரலாற்றிலிருந்து நழுவி விழுந்துவிட்டார் விவேக்.

அவர் ஒரு நடிகர்; அவர் கோட்பாட்டாளர் அல்ல. ஒரு நடிகராக, தனது காலவெளியில் புரட்சிகரக் கோட்பாடுகள் என்று சொல்லப்படுபவற்றை, அறிவினத்தாரால் புரட்சிகரம் என்று ஏற்கப்பட்டவற்றை, ‘அவை புரட்சிகரமானவைதான்’ என்று நம்பினார்; ஏற்றுக்கொண்டார். தான் நம்பியவற்றை, தான் ஏற்றுக்கொண்டவற்றை – நகைச்சுவை தடவி மக்களுக்குக்
கொண்டுசெலுத்தினார்.

இந்த அக்கறைதான் விவேக் என்கிற மனிதரை மதிப்பிற்குரிய மனிதராக்குகிறது; இந்த அக்கறைதான் விவேக் என்கிற நடிகரை மதிப்பிற்குரிய கலைஞராக்குகிறது. அவரது படைப்பாற்றலின் வழியே வெளிப்படுகிற அரசியல் கோட்பாடுகள்
குழப்பமானவை என்றபோதிலும், அவர் குற்றவாளியல்ல. அவரால் உள்வாங்கப்பட்ட கோட்பாடுகளின் குற்றங்களவை.

தமிழ் நிலத்தின் தனித்த வகையான வரலாற்றுச் சிக்கல்களையும், அரசியல் சிக்கல்களையும், பண்பாட்டுச் சிக்கல்களையும் தீர்ப்பதற்கு உகந்த தத்துவார்த்தத் தலைமையோ, அரசியல் தலைமையோ, பண்பாட்டுத் தலைமையோ தமிழ் நிலத்தில் தலைமையெடுக்க வில்லை. அதனாலேயே – தத்துவார்த்த வெறுமை, அரசியல் வெறுமை, பண்பாட்டு வெறுமை ஆகியன நிலவுகின்றன தமிழ் நிலத்தில். 

ஓருலக ஓரரசுவை உருவாக்குவதற்கான ஏகாதிபத்தியப் போட்டி கிழக்குக்கும் மேற்குக்குமான சண்டையாக நடந்துகொண்டிருக்கிற காலமிது.இயற்கைவளம் குன்றி மக்கள் தொகை பெருகிக் கொண்டிருக்கிற எதிர்விகிதத்தை நேர்விகிதக் கணக்காக்குகிற வேலைத்திட்டம் நடைமுறையாகிக் கொண்டிருக்கிற காலகட்டமிது.

இந்த உலகில் மீதமிருக்கும் வளங்களுக்குப் போட்டியாளராக பலவீனமானவர்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காக பலவீனமானவர்களை  இந்த பூமிப்பந்திலிருந்தே அப்புறப்படுத்துகிற கொலை விளையாட்டு பிக்பாஸ் ஆட்டம் நடந்துகொண்டிருக்கிறது.இந்த விளையாட்டின் ஒரு பகுதிதான் தமிழின அழிப்பு. அன்றைக்கு ஈழத்தில் இன்றைக்கு இங்கே.

இந்த நவீன நெருக்கடி குறித்து மக்களை எச்சரிக்கிற இயக்கங்களாக சென்ற நூற்றாண்டில் உருவாகி வந்த புரட்சிகரங்கள் இல்லை சென்ற நூற்றாண்டில் புரட்சிகரம், முற்போக்கு என்றெல்லாம் முழங்கிவந்த கோட்பாடுகள் இன்றைக்கு ஃபாசிசக் கருத்தியல்களாகத் தமது மெய்யுருவைக் காட்டிவிட்டன.

தமிழ் நிலத்தில் வெகுமக்கள் தலைமையை மெய்யான புரட்சிகரம் ஏற்றிருக்குமேயானால்,தமிழரது வரலாற்று முறைப்பாடுகளை ஒருங்கிணைத்திருக்குமேயானால் விவேக் என்கிற குமுகாய அக்கறை கொண்ட கலைஞர், அந்தப் புரட்சிகரத்தை வழிமொழிந்திருப்பார்.
தத்துவார்த்த / அரசியல் / பண்பாட்டு வெற்றிடம் கொண்டிருக்கிற காலவெளிதான் குற்றவாளி ஆகிறது. நமது காலவெளியை, தலையில்லா முண்டமென வைத்திருக்கிற இந்தக் குற்றத்தில், இதை எழுதிக்கொண்டிருக்கிற ஆளுக்கும் பங்குண்டுதான்; இதைப் படித்துக் கொண்டிருக்கிற ஆளுக்கும்தான்!

சின்னக் கலைவாணர் விவேக் அவர்களே, உங்களது குமுகாய அக்கறைக்கு நன்றி; உங்களது படைப்பாற்றலை வியக்கிறோம்; உங்களது பங்களிப்பைப் போற்றுகிறோம்; மக்கள் மீதான உங்களது அன்பு, உங்களது கலையில் இருப்பு கொண்டிருக்கிறது. அதனால் நீங்கள்
இருக்கிறீர்கள்; உங்களது இருப்பை வணங்குகிறோம்.

உங்கள் பூதவுடலுக்கு விடை தருகிறோம் சின்னக் கலைவாணரே!

Related Posts