November 5, 2025
செய்திக் குறிப்புகள்

நாகேஷ் பேரன் கஜேஷ் நடிக்கும் உருட்டு உருட்டு – படவிழா தொகுப்பு

நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் உருட்டு உருட்டு. கதாநாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா சின்னாலம்பட்டி சுகி, பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு, நடேசன், அங்காடித்தெரு கருப்பையா ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு – யுவராஜ் பால்ராஜ்,
பாடல் இசை – அருணகிரி,பின்னணி இசை – கார்த்திக் கிருஷ்ணன்,பாடல்கள் – பெப்சி தாஸ், பாஸ்கர்,படத்தொகுப்பு – திருச்செல்வம்,நடனம் – தினா.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் பாஸ்கர் சதாசிவம்.

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில்,சாய் காவியா, சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில்,சமூக அக்கறை மிக்க களத்தில்,கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ளது இப்படம்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு ஜூலை 11 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வினில் நாயகி ரித்விகா ஸ்ரேயா பேசியதாவது…

எல்லோருக்கும் முதல் நன்றி,இது என் முதல்படம், இயக்குநர் தயாரிப்பாளர் இருவருக்கும் என்னை நம்பி இந்த வாய்ப்பை தந்ததற்காக நன்றி.என்னுடன் படத்தில் நடித்த உழைத்த அனைத்துக் கலைஞர்களுக்கும் நன்றி. எனக்கு ஆக்டிங் சொல்லித்தந்து, என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டதற்கு நன்றி.நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக உழைத்தோமோ,அதேபோல் இந்தப்படம் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உண்ர்வீர்கள். அனைவருக்கும் நன்றி என்றார்.

நாயகன் கஜேஷ் நாகேஷ் பேசியதாவது…

எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் கொஞ்சம் கஷ்டத்தில்தான் ஆரம்பித்தோம், தயாரிப்பாளர் ஜெய் அண்ணா இந்தப்படத்தை நன்றாக செய்வோம் என உழைத்துள்ளார்.இசையமைப்பாளர் அருமையான இசையை தந்துள்ளார்.தினா மாஸ்டர் அருமையான நடனஅமைப்பை அமைத்துள்ளார். இயக்குநர் அழகாக இயக்கியுள்ளார்.உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும்,இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.

தயாரிப்பாளர் பத்மராஜு ஜெய்சங்கர் பேசியதாவது…

எங்களை வாழ்த்த வந்த பெரியவர்கள் அனைவருக்கும் நன்றி.பிரஸ் மீடியா நண்பர்கள் எங்களைப்போன்ற புது தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு தரவேண்டும்.நல்லபடமாக எடுத்துள்ளோம் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.

நடிகர் ஆனந்த்பாபு பேசியதாவது…

என் மகனின் படத்திற்கு வாழ்த்த வந்துள்ள திரையுலக பெரியவர்களான திரு விக்ரமன் சார்,திரு கஸ்தூரி ராஜா சார்,திரு ஆர்வி உதயகுமார் சார்,அனைவருக்கும் நன்றி.இவர்களுடைய ஆசிர்வாதம் என் பிள்ளைக்கு கிடைப்பது மகிழ்ச்சி.இது எங்க அப்பா செஞ்ச புண்ணியம்,நாகேஷ் ஐயாவுக்கான மரியாதையாக இது அமைந்துள்ளது.உருட்டு உருட்டு படத்தை இயக்குநர் அழகாக செய்துள்ளார்.என்னுடைய பையன் நாயகனாக நடித்துள்ளான்.நான் நடித்தபோது எனக்கு எப்படி ஆதரவு தந்தீர்களோ,அதேபோல் என் பையனுக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.

இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசியதாவது….

மீடியா நண்பர்களுக்கு வணக்கம்.பத்திரிக்கை நண்பர்களுக்கு வணக்கம்.இந்த விழாவிற்கு நான் வந்ததுக்கு பல காரணங்கள் இருக்கிறது.அதில் முதல் காரணம் வஜிரவேலு,நம்ம இயக்குநர் பாஸ்கருடைய சித்தப்பா,ஒரு காலத்தில் எனக்கு அவர் கார்டியனா இருந்தவர்.இயக்குநர் பாஸ்கர் இப்போது எனக்கு தோளோடு தோள் வந்து பக்கத்துல நிக்கிறாரு. இனி அடுத்து என்னை விட உயரமா நிற்பார்.அவரை சின்ன வயதில் இருந்து பார்க்கிறேன்.அவருக்கு என் வாழ்த்துகள்.அப்புறம் முக்கியமா தமிழ்திரையுலகின் தாரக மந்திரம் என்றைக்கும் அழிக்கமுடியாத நிரந்தரமான பெயர் நாகேஷ்.அவருக்காகத்தான் வந்தேன்.ஆனந்த்பாபு எனக்கு நெருங்கிய நண்பர்,நாகேஷ் சார் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் நடிச்சிருக்கார். நாகேஷ் சாரை பத்தி பேசாமல் எந்த ஒரு சினிமா மீடியாவும் தப்பிக்க முடியாது.அவ்வளவு சாதனைகள் செய்துள்ளார்.நாகேஷை பற்றி சொல்லவேண்டும் என்றால் பாலச்சந்தர் பற்றியும் சொல்லவேண்டும் இருவரும் செய்த சாதனைகள் அவ்வளவு இருக்கிறது.அவர் பேரனை நான் ஆசிர்வதிக்க வேண்டும் எனதுதான் வந்தேன்.ஆனந்தபாபுவுடைய சூழ்நிலையை நான் கண் முன்னாடி பார்த்திருக்கிறேன்.தனுஷை அறிமுகப்படுத்த தயாரிப்பாளர்களை நான் தேடிப் போகவில்லை.நானே தயாரிப்பாளரா இருந்தேன்.நானே இயக்குநராவும் இருந்தேன்.ஆனால் ஆனந்த்பாபு தன் பையனுக்காக ஒவ்வொரு அலுவலகத்துக்கும்போனார்.என்னுடைய அலுவலகத்துக்கும் வந்திருந்தார்.என் பையன்களுடைய அலுவலகத்துக்கும் போயிருக்கார்,அந்த தந்தையினுடைய வலிக்கு நீங்கதான் நிவாரணம் கொடுக்க வேண்டும். அதுக்காக இந்தப்படம் பெரிய வெற்றி பெறவேண்டும். உருட்டு உருட்டுன்னு டைட்டிலை கவர்ச்சியாக வைத்துள்ளார்கள்.இந்த தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள்.எல்லா டெக்னிசியன்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள் எல்லாரும் ஜெயிக்கணும். நன்றி என்றார்.

இயக்குநர் பாஸ்கர் சதாசிவம் பேசியதாவது…

இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி.படம் மிக நன்றாக வந்துள்ளது,அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள்,அனைவருக்கும் நன்றி என்றார்.

இயக்குநர் திரு ஆர்வி.உதயகுமார் பேசியதாவது…

எனது இனியநண்பர் கஸ்தூரிராஜா ஊரின் மாப்பிள்ளை நான்.அவரும் நானும் ஒன்றாக படமெடுக்க ஆரம்பித்தோம்.அவர் தைரியத்துக்கு நான் இரசிகன், தன் எல்லாப்பணத்தையும் வைத்து ரிஸ்க் எடுத்து, தனுஷை வைத்து படமெடுத்தார்.இப்போது ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியுள்ளார்.எங்களுக்கு ரசனையில்தான் போட்டி இருந்தது,யார் படம் வசூல் எனப்போட்டி இருந்ததில்லை.யாருக்கு பிள்ளைகள் நல்லா இருப்பார்கள்னா,தான் நியாயமா நேர்மையா ஒரு தொழில்ல சாதிச்சு,அடுத்தவங்களுக்கு உதவி பண்ணி, தன் பிள்ளைகளை தன் கஷ்டத்தை உணரவைத்து, யார் வளர்க்கிறானோ அவன் குழந்தைங்கதான் சிறப்பா இருக்கும்.அது சினிமாவிலும் சரி வெளியிலயும் சரி, கஷ்டத்தை உணர்ந்த பிள்ளை திரு ஆனந்த் பாபு அவர்களுடைய புதல்வர் கஜேஷ்.கண்டிப்பாக நீ பெரிய அளவில் வருவாய்.குழந்தைகளுக்கு வளரும்போது பணிவு வேணும்,நிறைய பேர் அந்தப்பணிவை கடைசில விட்டுடுறாங்க,நீ அன்போடு நேசித்து எல்லாரிடமும் பணிவா இருக்கனும்,அப்படி இருந்ததுதான் ரஜினிகாந்த் அவர்களின் வெற்றிக்குக் காரணம்.ரஜினி சார் தன்னை ஹீரோவா ஒரு படத்தில போட்ட பெரியவர் கஷ்டப்படுறார் என்று அவரைக் கூப்பிட்டு ஒரு வீடு வாங்கிக்கொடுத்தார் அதான் திரு கலைஞானம்.நமக்கு உதவி செய்தவர்களையோ,நம்மை நேசித்தவர்களையோ, நாம் மறக்கக்கூடாது.இந்தப்படத்தில் அதிர்ஷ்டசாலி மொட்டை ராஜேந்திரன் தான் அவரைப்பார்த்தால் எனக்கும் நடிக்க ஆசை வருகிறது.படத்தில் இசை பாடல் எல்லாம் நன்றாக உள்ளது.தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துக்கள். கதாநாயகி அழகாக இருக்கிறார்.நன்றாக நடித்துள்ளார். இப்படம் பெரிய வெற்றிபெற வாழ்த்துகள் நன்றி என்றார்.

இயக்குநர் விக்ரமன் பேசியதாவது…..

இந்தவிழாவில் பங்கு கொண்டது மகிழ்ச்சி.நான் நாகேஷ் சாரோடையும் வேலை செய்துள்ளேன்.ஆனந்தபாபு கூடவும் வேலை செய்துள்ளேன்.ஆனந்தபாபு புதுவசந்தம் படத்தில் நடித்தார்.அந்தப்படத்துல உள்ள டான்ஸ் மூமெண்ட், போடு தாளம் போடு பாட்டு,அப்புறம் ஆடலுடன் பாடலை கேட்டு எம்ஜிஆர் உடைய பாட்டு,நான் ரீமிக்ஸ் பண்ணிருந்தேன்,மனோவும் சுசீலாமா பாடவச்சு ஒரு நிமிடத்திற்கு செய்திருந்தேன்.அதெல்லாம் ஆனந்த பாபுதான் டான்ஸ் ஆடுவார்.கொரியோகிராபர்ல்லாம் வைத்துக்கொள்ளாமல்.அவரே வீட்டில் போட்டுப்பார்த்து, அவர் டான்ஸ் கோரியோகிராஃப் பண்ணுவார்.அந்தளவு திறமையானவர்.நாகேஷ் சாருடன் வேலை பார்த்துள்ளேன்,அவர் நடித்த காட்சி ஒன்று அதிக டேக் போனது,அன்று இரவு என்னிடம் வந்து,அதை திரும்ப எடுக்கலாம் நான் நன்றாக நடிக்கவில்லை என்றார். எனக்கு ஆச்சரியாமாக இருந்தது,எவ்வளவு பெரிய கலைஞன்,ஒரு இயக்குநருக்கு பிடிக்க வேண்டும் என எவ்வளவு பாடுபடுகிறார்,அதேபோல் தான் ஆனந்த்பாபுவும்.கஜேஷ் நீங்கள் அப்பாவையும் தாத்தாவையும் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.நன்றாக வருவீர்கள்.ஹீரோயின் கன்னடம்,கிட்டத்தட்ட நான் மெட்ராஸுக்கு வந்து 43 வருஷம் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு 35 வருஷமா யாரும் தாவணி போட்டு இங்கு பார்த்ததே இல்லை,ஹீரொயின் தாவணி போட்டு வந்துள்ளார் அவருக்கு வாழ்த்துகள்.பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளது.இயக்குநர் படத்தை நன்றாக தந்துள்ளார்.படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

– புவன்

Related Posts