திட்டம் இரண்டு – திரைப்பட விமர்சனம்
ஒரு கொலை நடக்கும், அதைச் செய்தது யார்? என்கிற விசாரணை நடக்கும், அதில் பல பேர் மீது சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டு கடைசியில் புதிதாக ஒருவரைச் சொல்லி இவர்தான் அந்தக் கொலையைச் செய்தார் என்று முடிக்கும் படங்களின் வரிசையில் சேரக்கூடிய படம்தான் திட்டம் இரண்டு என்றாலும் இப்படத்தில் முடிச்சு அவிழ்க்கப்படும் இடம் யாரும் எதிர்பாராதது, இதுவரை திரைப்படங்களில் வராதது.
காவல்துறை ஆய்வாளர் வேடத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு. காவல்துறை மிடுக்கு, தோழியின் பிரிவு தரும் வேதனை, விசாரணையின் போது கிடைக்கும் அதிர்ச்சி ஆகிய உணர்ச்சிகளை உடல்மொழியுடன் கண்களிலும் வெளிப்படுத்துவது அவருடைய தனித்தன்மை. காதலனுடன் மனம்விட்டுப் பேசும் காட்சியை அவருடைய நடிப்பே சிறப்பாக்குகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷின் தோழியாக நடித்திருக்கும் அனன்யா ராம்பிரசாத்தை முதலில் பார்க்கும்போது இவரை விட அழகான ஒரு பெண்ணை நடிக்க வைத்திருக்கலாமே எனத்தோன்றும். ஆனால் கதையின் முடிச்சு அவிழும்போது இவரைவிட அதற்குப் பொருத்தமானவர் வேறு யாரும் இருக்கமாட்டார்கள் என்று தெரிகிறது.
ஐஸ்வர்யாவின் காதலனாக வரும் சுபாஷ்செல்வம் அதிர்ஷ்டக்காரர். அவருடைய வேடம் அருமை. அதற்கு முழுநியாயத்துடன் உழைத்திருக்கிறார்.
அனன்யா ராம்பிரசாத்தின் முன்னாள் காதலன் பரணியாக நடித்திருக்கும் பாவல்நவகீதன், வசன உச்சரிப்புகளால் கவனிக்க வைக்கிறார். பெண்களை நம்பி ஏமாறும் ஆண்களின் வலியை காவல்துறை விசாரணையின்போது வெளிப்படுத்துகிறார். அவருடைய வேடம் கதைக்கும் மிகவும் முக்கியமானது அதை நிறைவாகச் செய்திருக்கிறார்.
உதவி ஆய்வாளர்களாக வரும் முரளி ராதாகிருஷ்ணன், ஜீவா ரவி, தோழியின் கணவர் கோகுல் ஆனந்த் ஆகியோரும் தங்கள் பங்களிப்பைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
கோகுல்பினாயின் ஒளிப்பதிவும் சதீஷ் ரகுநாதனின் பின்னணி இசையும் படத்தைக் கவனிக்க வைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
ஒரே நேர்க்கோட்டில் செல்லும் திரைக்கதை பல இடங்களில் மெதுவாகச் செல்வது பலவீனம்.இடைவேளைக் காட்சியில் சுபாஷ்செல்வம் அனன்யா ஆகிய இருவரையும் காட்டி ஏமாற்றியிருக்கிறார்கள்.
இவற்றைத்தாண்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் சிசிடிவி காட்சிகளை வைத்து உண்மையை அறியும் காட்சி உட்பட பல சுவாரசியமான காட்சிகள் இருப்பதும், கதையின் திருப்பம் உண்மையிலேயே திடுக்கிடும் திருப்பமாக இருப்பதும் பலம். எழுதி இயக்கியிருக்கும் விக்னேஷ் கார்த்திக்குக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.











