தெறி மறுவெளியீடு தள்ளிவைப்பு – ஏன்?
ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம் சச்சின்.
கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவான சச்சின் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2025 ஏப்ரல் 18 ஆம் தேதி உலகமெங்கும் 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டது.
அந்தப் படம் மறுவெளியீடு செய்யப்பட்டு நல்ல வரவேற்புப் பெற்றது.அதனால், அப்போதே சச்சின் படத்தைத் தொடர்ந்து அவருடைய தயாரிப்பில் விஜய் நடித்த ‘தெறி’ படம் 2026 ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என்று கலைப்புலி தாணு தெரிவித்திருந்தார்.
விஜய் – அட்லி கூட்டணி இணைப்பில் உருவான தெறி படம் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியானது.அப்போது பெரும் வரவேற்புப் பெற்ற இப்படத்தில் சமந்தா, ஏமி ஜாக்சன், ராதிகா சரத்குமார், பிரபு, இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கடந்த ஆண்டு அறிவித்தபடி இவ்வாண்டு ஏப்ரலில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டு வேலைகள் பார்த்துக் கொண்டிருந்த தயாரிப்பாளர் தாணு, திடீரென இப்படம் தை பொங்கலையொட்டி சனவரி 15 ஆம் தேதி இப்படம் வெளியிடப்படும் என்று அறிவித்தார்.
இப்போது, அவர் அறிவித்தபடி இந்தப்படம் சனவரி 15 அன்று வெளியாகாது என்று சொல்லப்படுகிறது.
ஏன்?
பொங்கல் வெளியீடாக சனவரி 9 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படம் சொன்னபடி வெளியாகவில்லை.அதற்குக் காரணம், தணிக்கைச் சிக்கல் என்பது ஊரறிந்தது.
ஜனநாயகன் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கும் தணிக்கை வாரியத்துக்கும் இடையிலான வழக்கு சென்னை உயர்நீதிமன்றம்,உச்சநீதிமன்றம் ஆகிய மன்றங்களில் நடந்து கொண்டிருக்கின்றன.
இதனால் பொங்கல் நாளான சனவரி 15 ஆம் தேதியும் அப்படம் வெளியாகும் என்பது ஐயமாக இருந்தது.இதனால் வருத்தத்தில் இருக்கும் விஜய் மற்றும் அவருடைய இரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக தெறி படத்தை ஏப்ரல் 14 க்கு பதிலாக சனவரி 15 அன்றே வெளியிடத் திட்டமிட்டு அதை அறிவிக்கவும் செய்தார் கலைப்புலி தாணு.
இதனால் விஜய் மகிழ்ச்சியடைவார் என்கிற அவருடைய எதிர்பார்ப்பு பொய்யாகி, விஜய் தரப்பிலிருந்தே தெறி படத்தை சனவரி 15 அன்று வெளியிட வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டதாம்.
பிள்ளையார் பிடிக்க குரங்காகிவிட்டதே என்கிற அதிர்ச்சியில் படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்துவிட்டாராம் கலைப்புலி தாணு.
சனவரி 15 வெளியீடு என்று அறிவித்தவர் தள்ளி வைத்ததை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.











