சினிமா செய்திகள்

மாநாடு தெலுங்கு டப்பிங் ரிலீஸில் சிக்கல்

மாநாடு படம் பல்வேறு சிக்கல்களைத் தாண்டி நவம்பர் 25 அன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

தமிழில் வெளியாகும் அதேநாளில் இப்படத்தைத் தெலுங்கிலும் வெளியிட முடிவெடுத்து குரல்மாற்று செய்து வைத்திருந்தார்கள். தெலுங்கில் இப்படத்துக்கு தி லூப் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது.

தி லூப் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக ஐதராபாத் போய் ஊடகங்களைச் சந்தித்துவந்தார் சிம்பு.

ஆனால், கடைசிநேரத்தில் பட வெளியீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தெலுங்கில் படம் வெளியாகவில்லை.

இப்போது தெலுங்குப் பதிப்பை வெளியிடும் முயற்சிகள் நடக்கின்றனவாம்.டிசம்பர் 3 ஆம் தேதி தெலுங்கில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அது உறுதியாகவில்லை.

அதற்குக் காரணம், தெலுங்கு வெளியீட்டில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

அது என்ன?

தெலுங்கு டப்பிங் உரிமை சுமார் ஒன்றரை கோடிக்குக் கொடுக்கப்பட்டிருந்ததாம். சரியான நேரத்தில் படத்தைக் கொடுக்காததால் அது முறிவடைந்துவிட்டது என்கிறார்கள்.

தமிழில் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருவதால், தெலுங்கு குரல்மாற்று மற்றும் மொழிமாற்று உரிமை விலை நான்கு கோடி என்று சொல்லிக்கொண்டிருக்கிறாராம் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி.

இதனால், அதிர்ச்சியடைந்தவர்கள் விலையைக் குறைக்கச் சொல்லிப் பேசிக்கொண்டிருக்கிறார்களாம். இதனால் தெலுங்கு வெளியீட்டுத் தேதி உறுதியாகாமல் சிக்கல் நீடிக்கிறது என்கிறார்கள்.

Related Posts