September 10, 2025
விமர்சனம்

தமிழ்ப்படம் 2 – திரைப்பட விமர்சனம்

பாட்டெழுதிப் பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள், குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்.

இதில் தமிழ்ப்படம் 2 இன் இயக்குநர் அமுதன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்.

ரஜினி, கமல், விஜய், அஜீத்,விக்ரம், சூர்யா, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் உட்பட எல்லா நடிகர்களின் படங்களிலும், அந்தப் படங்கள் வெளியான காலத்தில் சுட்டிக்காட்டப்பட்ட குறைகளைத் தொகுத்து திரைக்கதை அமைத்துவிட்டார்.

திரைப்படத்தைத் தாண்டி கமல்,ரஜினியின் அரசியல், ஜெ மறைவுக்குப் பின் தமிழக அரசியலில் நடந்த தியானம், தர்மயுத்தம்,சமாதி மேல் சத்தியம் ஆகியனவற்றையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

தமிழ்ப்படம் 1 க்கும் 2 க்கும் உள்ள முக்கியமான வேறுபாடு அதில் நாயகன் சிவா அளவான உடலோடு இருந்தார். இதில் ஊதிப்போயிருக்கிறார்.

இந்தப்படத்தில் வில்லனாக நகைச்சுவை நடிகர் சதீஷ் நடித்திருக்கிறார். அவருக்கு வில்லத்தனமும் வரவில்லை, நகைச்சுவையும் வரவில்லை. மங்காத்தா அஜீத், அந்நியன் விக்ரம், தேவர்மகன் நாசர், நூறாவது நாள் சத்யராஜ் ஆகிய கெட்டப்பில் வரும் சதீஷ், வரவிருக்கும் 2ஓ படத்தின் வில்லன் கெட்டப்பிலும் வருகிறார்.

நாயகி ஐஸ்வர்யாதத்தா ஆறுதலாக இருக்கிறார்.

பெரிய நடிகர்களின் படங்கள் எல்லோரும் பார்த்து வியந்த அல்லது நொந்த காட்சிகளைக் கிண்டலடித்திருப்பதால் பல இடங்களில் சிரிப்பால் திரையரங்கு அதிர்கிறது.

தமிழ்ப்படம் வந்தபோது மீம்ஸ் என்பதே இல்லை. இப்போது ஒரு செயல் நடந்து முடியுமுன்பே மீம்ஸ் வந்துவிடுகிறது. அதனால் இந்தப்படம் செய்யும் கேலிகள் பெரிதாக இல்லை.

ஒரு வலுவான திரைக்கதை அமைத்து அதற்குப் பக்கபலமாக இந்தக் கேலிகளை வைத்திருந்தால் இன்னும் பலமாக இருந்திருக்கும்.

சைட் டிஷ்ஷே உணவானால் டைஜெஷன் ஆகாது.

Related Posts