மூன்று நாயகர்கள் நான்கு நாயகிகள் – சுந்தர்.சியின் அடுத்தபட விவரங்கள்
அரண்மனை-3 படத்திற்குப் பிறகு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் காபி வித் காதல். குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று கதாநாயகர்கள் நடிக்க மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர்.
பல வருடங்களுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம், ஊட்டியை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.அந்த வகையில் தற்போது இந்தப் படமும் சென்னையில் துவங்கி ஊட்டியில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்தப்படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 75 நாட்கள் நடைபெற்றுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். மொத்தம் 8 பாடல்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளன.இப்படத்துக்கு ஈ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்புப் பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்கிறார்.
ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று சகோதரர்கள் அவர்களுக்குள் ஒத்துப்போகாத வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறார்கள். இசையமைப்பாளராக ஒருவன், ஐ டி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவன், சமையல் வேலையில் ஆர்வம் உடைய ஒருவன். அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை தனது பாணியில் கலகலப்புடன் கூறி இருக்கிறார் சுந்தர்.சி.
இந்தப் படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் ஜூலை மாதம் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.












