கைவிட்ட சூர்யா கட்டியணைத்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் இப்போது மாவீரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் அந்தப்படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண்விஷ்வா தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப்படத்தை ஜூன் 29 வியாழக்கிழமையன்று வெளியிடத் திட்டமிட்டு அதற்கேற்ப வேலைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன என்று சொல்கிறார்கள்.
இதற்கடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதியபடத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் காஷ்மீரில் தொடங்கவிருக்கிறதாம்.
அதற்கடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதற்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன என்கிறார்கள்.
இந்நிலையில் இன்னொரு புதியபடத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டுள்ள தகவல் கசிந்துள்ளது.
அந்தப்புதிய படத்தை இன்று நேற்று நாளை மற்றும் இன்னும் வெளிவராத அயலான் ஆகிய படங்களை இயக்கியுள்ள ரவிக்குமார் இயக்குகிறாராம். அந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம்.
அயலான் படம் தாமதமாகிக் கொண்டே இருப்பதால் கருணை அடிப்படையில் ரவிக்குமார் இயக்கத்தில் இன்னொரு படம் நடிப்பதாக சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டிருந்தார். அதேநேரம், சூர்யாவுக்கு ஒரு கதை சொல்லியிருந்தார் ரவிக்குமார். அதனால் முதலில் சூர்யா படத்தை இயக்கிவிட்டு அடுத்து சிவகார்த்திகேயன் படத்துக்கு வருவதாக ரவிக்குமார் சொல்லியிருந்தாராம்.
இப்போது ரவிக்குமாருக்கு சூர்யா படம் இல்லையென்றாகிவிட்டதாம். அதனால் திடுக்கிட்டு நின்ற ரவிக்குமாருக்கு சிவகார்த்திகேயன் கைகொடுத்திருக்கிறார்.
இப்படம் குறித்த பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் நிலையில் இருக்கின்றன என்கிறார்கள். இதற்கு முன்பு சிவகார்த்திகேயனுக்கு இரண்டு படங்கள் இருப்பதால் இப்படம் குறித்த அறிவிப்பை கொஞ்சம் தாமதமாக வெளியிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.











