ஷூ – திரைப்பட விமர்சனம்
டைம் டிராவல் வகைப் பட வரிசையில் சேரக்கூடிய படமாக வந்திருக்கிறது ஷூ. முழுமையான தலைப்பு ரிபீட் ஷூ.
ஒரு கால் ஷூ வை தரையில் உதைத்தால் பத்துநிமிடம் பின்னால் போகலாம் இன்னொரு கால் ஷூவை தரையில் உதைத்தால் பத்துநாட்கள் பின்னால் போகலாம் என்கிற மாதிரியான ஒரு ஷூவை கண்டுபிடிக்கிறார் திலீபன். அது சந்தர்ப்ப வசத்தால் யோகிபாபுவின் கைகளுக்கு மன்னிக்கவும் கால்களுக்குக் கிடைக்கிறது.
அதனால் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் ஷூ படம்.
யோகிபாபு, ரெடின்கிங்ஸ்லி, கேபிஒய்.பாலா ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து பேசிப்பேசிச் சிரிக்கவைக்க முயல்கிறார்கள். ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை. டைம்டிராவல் ஷூ கிடைத்ததும் யோகிபாபு வாழ்வில் நடக்கும் அதிரடி மாற்றங்கள் சுவாரசியம்.
படத்தின் நாயகியாக சிறுமி பிரியாகல்யாண் இருக்கிறார். அவருடைய பாத்திர வடிவமைப்பும் அதற்கு அவர் உயிர்கொடுத்திருக்கும் விதமும் நன்று. பள்ளிக்கூடம், செருப்பு தைக்கும் கடை ஆகிய இடங்களில் மட்டுமின்றி சிறைப்பட்டுத் தவிக்கும் நேரத்தில், அங்குள்ள அவ்வளவு பேருக்கும் தலைமை ஏற்கும் காட்சிகள் ஆகிய அனைத்திலும் பார்வையாளர்களை ஈர்க்கிறார்.
பார்ப்போர் அனைவரும் ஆத்திரப்பட்டு அடித்துத் துவைக்க நினைக்கும் கதாபாத்திரம் பாடகர் ஆண்டனிதாசனுக்கு. அதில் பொருத்தமாக நடித்து கோபமூட்டியிருக்கிறார்.
ஏற்கெனவே ஜாக்பாட் போன்ற நகைச்சுவைப் படங்களை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் யோகிபாபு இருக்கிறார்
என்றதும் இதுவும் நகைச்சுவைப் படமாக இருக்கும் என்று எதிர்பார்த்துப் போனால் ஏமாற்றம்.
செம்மலர் அன்னத்திடம், எங்கம்மா பேரை மாத்து என்று கத்துவதும் அப்பா அடிவாங்குகிறார் என்றதும் திரும்பவந்து மாட்டிக்கொள்வதும் என சிறுமி பிரியாகல்யாண் வரும் எல்லாக் காட்சிகளிலும் சோகம் வழிந்தோடுகிறது.அம்மாவின் புகைப்படத்தைக் கூடப் பார்க்க முடியாத நிலை இன்னும் சோகம்.
சிறுமிகள் கடத்தல், அவர்களைப் பாலியல் கொடுமை செய்தல் ஆகிய காட்சிகள் ஏற்றுக்கொள்ள இயலாதவை.
எல்லாமே செயற்கையாக இருப்பதும், தரகருக்குக் கூடத் தெரிகிற இடத்தில் வைத்து கொடுமைகள் நடக்கின்றன என்பதும் நம்பவியலாதவையாக இருக்கின்றன.
இறுதியில்,காலத்தால் பின்னோக்கிச் சென்று எல்லாம் சுபம் என முடியும்போது ஆறுதலாக இருக்கிறது.











