October 17, 2026
விமர்சனம்

டபுள் டக்கர் – திரைப்பட விமர்சனம்

இரசிகரகளைச் சிரிக்க வைக்க வேண்டும் குறிப்பாக குழந்தைகளைக் குதூகலப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் படம் டபுள்டக்கர்.

எமனிடம் பணிபுரியும் சித்ரகுப்தன் போல இந்தப்படத்தில் இருக்கும் லெஃப்ட் மற்றும் ரைட் ஆகிய கதாபாத்திரங்கள் ஓர் உயிரைத் தவறுதலாக எடுத்துவிட்டு அந்த விசயம் கடவுளுக்குத் தெரிவதற்கு முன்பு அதைச் சரி செய்ய முயல்கின்றனர். அவர்கள் முயற்சி திருவினையானதா? என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் தீரஜ்ஜுக்கு இரண்டு வேடங்கள்.இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் காட்டியிருக்கிறார்.காதலியும் உடனிருந்த சிறுவனும் புறத்தோற்றம் காரணமாக அவரிடமிருந்து விலகும் நேரத்தில் அந்த வலியை நடிப்பில் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்முருதிவெங்கட்டுக்கு திரைக்கதையில் குறைவான இடமே கிடைத்திருக்கிறது. அதை நிறைவாகச் செய்திருக்கிறார்.

கருணாகரன், யாஷிகா ஆனந்த், சுனில் ரெட்டி , ஷாரா, எம்.எஸ்.பாஸ்கர், மன்சூர் அலிகான்,்கோவை சரளா ஆகிய அனைவருமே சிரிக்க வைப்பதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

லெஃப்ட் மற்றும் ரைட் ஆகிய கணிணி வரைகலைக் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருக்கும் காளிவெங்கட் மற்றும் முனீஸ்காந்த் ஆகியோரின் குரல்கள் அந்தக் கதாபாத்திரங்களுக்கும் படத்துக்கும் பலம்.

ஒளிப்பதிவாளர் கவுதம் ராஜேந்திரனின் உழைப்பில் நிஜ நடிகர்களும் வரைகலைப் பாத்திரங்களும் பொருத்தமாக இணைந்து பயணிக்கின்றனர்.

வித்யாசாகரின் இசையில் பாடல்கள் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.பின்னணி இசையிலும் காட்சிகளுக்குக் கனம் சேர்த்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் மீரா மஹதி, ரஜினிகாந்த்தின் அதிசயப்பிறவி படத்தின் மைய இழையைப் போலவே ஒரு கதையை எழுதி, அதை இன்றைய குழந்தைகளும் இரசித்துப் பார்கக வேண்டுமென உழைத்திருக்கிறார்.

இக்கால வெற்றிப்படங்களின் காட்சிகளை அங்கங்கே இணைத்தது உட்பட பல புதிய உத்திகளைக் கையாண்டு படத்தை இரசிக்க வைத்திருக்கிறார்.

– இளையவன்

Related Posts