February 10, 2026
செய்திக் குறிப்புகள்

மை லார்ட் சோகப்படமல்ல சிரிக்க வைக்கும் படம் – சசிகுமார் உறுதி

ராஜுமுருகன் எழுத்து இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் படம் மை லார்ட்.இப்படத்தில், சைத்ரா ஜே.ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம்,ஆஷா சரத்,இயக்குநர் கோபி நயினார்,வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு,ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள,படத்தொகுப்புப் பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார்.டி.ஆர்.பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்ற, நடனத்தை எம்.ஷெரீப்பும்,சண்டைக் காட்சிகளை பி.சி.ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள்.

இந்தப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார்.இப்படம் – பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் இரசிகர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து, பாடல் பாடி, பட வசனங்கள் பேசி, இரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,

மை லார்ட் இரசிகர்களுக்கு ஒரு முழுமையைக் கொடுக்கும் படமாக இருக்கும்.ஒரு சாப்பாடு சாப்பிட்டால் நமக்கு என்ன ஒரு திருப்தி, ஒரு நிறைவு கிடைக்குமோ, அதுபோலதான் இந்த மை லார்ட் திரைப்படம்.சாப்பாட்டில் சுவை முக்கியம்தான்,ஆனால் உடம்புக்கு கெடுதல் என்றால் சுவையாக இருந்தாலும் அதை சாப்பிடக்கூடாது.
“மை லார்ட்” படம், எல்லாருமே இரசித்து,சந்தோசமாக,ரொம்ப என்ஜாய் பண்ணி,எண்டர்டெயின் ஆகி பார்க்குற சுவையுடன் கூடிய படமாக இருக்கும்.அதே நேரத்தில்,மனிதர்களாக நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதையும் நமக்கு உணர்த்தும் படமாகவும் இருக்கும்.
சசி சாருக்கு “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்திற்கு பிறகு “மை லார்ட்” மிகப்பெரிய வெற்றிப் படமாக இருக்கும்.ராஜுமுருகனுக்கு இது பெரிய வெற்றிப் படமாக அமையவேண்டும் என்று மனதார வேண்டுகிறேன் நன்றி என்றார்.

இயக்குநர் ராஜுமுருகன் பேசியதாவது..,

மை லார்ட் பிப்ரவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.அதாவது வேலண்டைன்ஸ் டே சமயத்தில் ரிலீஸ் ஆகிறது. இதனால் பலர்,“வேலண்டைன்ஸ் டேக்கும் ‘மை லார்ட்’ என்ற டைட்டிலுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டார்கள்.உண்மையில் இந்தப்படத்துக்கும் வேலண்டைன்ஸ் டேவுக்கும் மிகநெருக்கமான தொடர்பு இருக்கிறது.ஏனென்றால் மை லார்ட் என்பது சசிகுமார் மற்றும் சைத்ரா (முத்துசிற்பி, சுசீலா) ஆகியோரின் காதல் நிறைந்த ஒரு தம்பதியரை மையமாகக் கொண்ட படம்.

ஒரு அழகான கணவன்–மனைவி.அவர்களுக்கிடையிலான அன்புதான் இந்தப்படத்தின் மையம்.கணவன் மனைவிக்கிடையில் இருக்கும் ஆழமான அன்புதான்,உலகத்திலேயே மிகப்பெரிய காதல்.அதனால் மை லார்ட் வேலண்டைன்ஸ் டே சமயத்தில் வெளியாகிறது.இதைவிட பொருத்தமான நேரம் இருக்கமுடியாது.என்னுடைய படங்களில் பொதுவாகவே காதலுக்கு நான் மிக முக்கியத்துவம் கொடுப்பேன்.காதல் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு மட்டுமல்ல.

நம்மைச் சுற்றியுள்ள சக மனிதர்களை நேசிக்கும் மனநிலையே காதல் என்று நான் நம்புகிறேன்.அந்தவகையில்,இந்தப்படம் கணவன்–மனைவிக்கிடையிலான காதலைப் பேசுகிறது.அதேநேரத்தில்,உலகம் முழுவதும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் எப்படி நேசிக்க வேண்டும் என்பதையும் சொல்லும் படமாக இருக்கும்.

இப்படியான அன்பையும் மனிதநேயத்தையும் பேசும்படத்தை சசிகுமார் தவிர வேறு யாராலும் செய்யமுடியாது.தமிழ்மக்களுக்கு நன்றாகத் தெரியும் — சசிகுமார் என்றாலே அன்பும் மனிதநேயமும் கொண்டவர் அது சினிமாவில் மட்டுமல்ல;சினிமாவுக்கு வெளியிலும் அவர் அப்படியே வாழும் மனிதர்.அதனால் முத்துசிற்பி கதாபாத்திரத்திற்கு அவரைவிட சிறந்த ஆள் யாரும் இல்லை.

அதேபோல் சைத்ரா இந்தப்படத்தில் மிக அழகாக நடித்துள்ளார்.மை லார்ட் மூலமாக அவரை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்.கர்நாடகாவிலிருந்து ஒரு சிறந்த நடிப்புத்திறன் கொண்ட நடிகை நமக்கு கிடைத்துள்ளார்.தமிழ்நாடு எப்போதுமே வந்தாரை வாழவைக்கும் பூமி.அந்தவகையில்,அவரையும் தமிழ்நாடு வாழவைக்கும்.

என்னுடைய ஆத்மார்த்தமான இசை நண்பர் ஷானுக்கு இந்தநேரத்தில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர் அற்புதமான இசையைத் தந்துள்ளார்.

பெரும் உழைப்புடன்,முழுக்க முழுக்க மக்களுக்கான படமாக மை லார்ட் உருவாக்கப்பட்டுள்ளது.இந்தப்படத்திற்கு நீங்கள் தரும் அன்புதான் எங்களைப் போன்ற கலைஞர்களை வாழவைக்கும்.அனைவருக்கும் நன்றி.பிப்ரவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் ‘மை லார்ட்’ கண்டிப்பாகப் பாருங்கள் என்றார்.

நடிகை சைத்ரா பேசியதாவது..,

இந்தப்படம் மிகமிக இனிமையான அனுபவம்,இந்தியசினிமாவின் முக்கியமான ஆளுமைகள் பங்குபெற்ற படத்தில் நானும் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.இப்படத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.ஷான்ரோல்டன் இசை அனைவருக்கும் பிடிக்கும்.இப்படப் பாடல்களும் அனைவருக்கும் பிடிக்கும்.இந்தப்படத்தில் காதல் இருக்கிறது.சசிகுமார் மிக ஜாலியானவர்.அவர் இயக்குநர் என்பதால், அவருடன் நடித்தது நல்ல அனுபவம்.அவருடன் இன்னும் நிறைய படம் நடிக்க ஆசை.பொலிடிகல் டிராமாவும் இருக்கிறது.நீங்கள் கொடுக்கும் பணத்திற்குப் பயனுள்ள படமாக இருக்கும்.
எல்லோரும் கண்டிப்பாக பிப்ரவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் ‘மை லார்ட்’ கண்டிப்பாக பார்த்து ஆதரவு தாருங்கள் என்றார்.

நடிகர் சசிகுமார் பேசியதாவது…,

டூரிஸ்ட் ஃபேமிலியில் மனிதநேயத்தைப் பற்றிச் சொன்ன மாதிரி,இந்தப்படமும் உங்களுக்கு அன்பையும்,மனிதநேயத்தையும் போதிக்கும் படம்.என்னுடைய படங்கள் எப்போதுமே ஃபேமிலிக்கான படங்கள்.உங்கள் குடும்பத்தோட,குழந்தைகளோட நிச்சயமாக வந்து பார்க்கலாம்.இளம்தலைமுறைக்கும் ஏற்ற ஒரு படம்.இப்போ உள்ள ஜெனரேஷன்,வேகமா கோபப்படுற சூழ்நிலைக்கு நடுவில்,
“பொறுமையா இருங்க, மனிதநேயமா இருங்க” என்று சொல்கிற படம்.ராஜுமுருகன் சார் ஸ்டைலில்,கலகலப்பான காமெடியோட படம் நகரும்.உங்களை சோகப்படுத்த மாட்டோம்.அழவைக்க மாட்டோம்.சிரிக்க வைப்போம்…சிந்திக்க வைப்போம்.

நாயகி சைத்ரா,கர்நாடகாவிலிருந்து வந்து தமிழில் சிறப்பாக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.“கன்னடத்தில் சிறந்தநடிகையாக இருப்பதுபோல,தமிழிலும் அவர் ஒரு முக்கிய நடிகையாக வளர்வார்.மை லார்ட் அவருக்கான சிறந்த அறிமுகமாக இருக்கும்.

படத்தில் குருசோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.எதிர்பாராத சூழ்நிலையில் படக்குழுவில் இணைந்த அவர்,எந்த தயக்கமும் இன்றி வந்து கதாபாத்திரத்திற்கு முழுமையான உயிர் கொடுத்தார்.

இசையமைப்பாளர் ஷான் குரல் எல்லோரையும் கவரும் தன்மை கொண்டது.காதல்,சோகம்,சந்தோஷம் – எந்த உணர்வாக இருந்தாலும் அவரது குரல் மனதில் நிற்கும்.டூரிஸ்ட்ஃபேமிலிக்குப் பிறகு மீண்டும் இணைவது மிகுந்த சந்தோஷம்.பிப்ரவரி 13-ஆம் தேதி,சமயத்தில் மை லார்ட் படம் வருகிறது அனைவரும் பார்த்துக் கொண்டாடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts