December 5, 2025
விமர்சனம்

சாரா – திரைப்பட விமர்சனம்

கட்டிட பொறியாளர் நாயகி சாக்‌ஷிஅகர்வாலுக்கும் ஒரு நிறுவனத்தில் உயர் பொறுப்ப்ல் இருக்கும் விஜய் விஷ்வாவுக்கும் திருமணம் நிச்சயமாகிறது.அதேநேரம் சாக்‌ஷி அகர்வாலை கல்யாணம் செய்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார் கட்டுமான தொழிலாளி செல்லக்குட்டி.அது ஏன்? அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதைத் திகில் கலந்தி சொல்லியிருக்கும் படம் சாரா.

படத்தின் முதன்மை வேடமேற்றிருக்கும் சாக்‌ஷி அகர்வால், பல்வேறு உடையலங்காரங்களுட்ன அவற்றிற்கேற்ற உடல்மொழிகளுடன் வருகிறார்.படம் மொத்தமும் நம் மீதே இருக்கிறது என்பதை உணர்ந்து நடித்து வரவேற்புப் பெறுகிறார்.

நாயகியைத் திருமணம் செய்யப்போவதால் நாயகனாக விஜய்விஷ்வா இருப்பார் என்று நினைத்தால் கொஞ்சநேரம்தான் அவருக்கு அந்த வாய்ப்பு.அதன்பின் காணாமல் போகிறார்.

எதிர்மறை வேடத்தில் நடித்திருக்கும் செல்லக்குட்டி, யார் இவர்? என்று கேட்க வைத்திருக்கிறார்.மிகை நடிப்பு என்று சொல்லக்கூடிய மாதிரி இருந்தாலும் கதைக்கும் கதைக்களத்துக்கும் பொருத்தமாக இருப்பதால் வரவேற்புப் பெறுகிறார்.

யோகிபாபுவுக்கு இரசிகர்களைச் சிரிக்க வைக்கும் பொறுப்பு.அதைச் சில இடங்களில் சிறப்பாகவும் சில இடங்களில் அளவாகவும் செய்திருக்கிறார்.

கட்டிட காவலாளியாக நடித்திருக்கும் ரோபோ சங்கருக்குக் கதையில் முக்கியப் பங்கு இருக்கிறது.அதற்கேற்ப நடித்திருக்கிறார்.

செல்லக்குட்டியின் அம்மாவாக நடித்திருக்கும் அம்பிகா,மரணப்படுக்கையில் இருந்தாலும் நடிப்பில் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார்.

சண்டைப்பயிற்சி இயக்குநர் மிரட்டல் செல்வா நடிப்பில் கவனிக்க வைக்கிறார்.

கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசை திரைக்கதைக்குப் உரம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஜெ.லக்‌ஷ்மன் குமார்,இந்தக் கதைக்கு நம் உழைப்பு முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார்.சில காட்சிகளில் ஒளியமைப்பு வியக்க வைத்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் ஜான் ஆபிரகாம் படம் சலிப்பின்றி நகர வேண்டும் என்பதற்காகக் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பது தெரிகிறது.அது படத்துக்கு உதவியாக இருக்கிறது.

நட்பு,காதல் ஆகியனவற்றை மையமாகக் கொண்டு மர்மம் கலந்த திகில் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் செல்லக்குட்டி.இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் வரவேற்புப் பெற்றிருக்கிறார்.

– இளையவன்

Related Posts