October 23, 2026
சினிமா செய்திகள்

உறுதியானது ரஜினியின் அடுத்த படம் – இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் விவரம்

ரஜினிகாந்த் இப்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தில் அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் முழுக்க படமாக்கிவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள். அவர் இல்லாத பகுதிகளின் படப்பிடிப்பு இன்னும் பதினைந்து நாட்கள் இருக்கிறது என்கிறார்கள்.

படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த பின்பு படத்தை மொத்தமாகத் தொகுத்துப் பார்த்துவிட்டு தேவைப்பட்டால் ஓரிரு நாட்கள் ரஜினி நடிக்க வேண்டியிருக்கும் என்று சொல்கிறார்கள்.

இந்நிலையில், அண்ணாத்த படத்துக்கு அடுத்து ரஜினி நடிக்கவிருக்கும் படம் உறுதியாகிவிட்டதாம்.

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது யார்? என்கிற கேள்விக்கு விடையாகக் கடைசிவரை வந்தவர்கள் கார்த்திக் சுப்புராஜ் மற்றும்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ஆகியோர்.

இவர்களில் ரஜினியை இயக்கும் வாய்ப்புக் கிடைத்த அதிர்ஷ்டசாலியாகியிருக்கிறார் தேசிங்கு பெரியசாமி.ஆம்,அவரைத்தான் ரஜினி தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

இந்தப்படத்தைத் தயாரிக்கவிருப்பது ஏஜிஎஸ் நிறுவனம் என்கிறார்கள். ரஜினியை வைத்துப் படம் தயாரிக்க அந்நிறுவனம் பலகாலமாக முயன்று வந்தது.இப்போது அது கைகூடி வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அமெரிக்கா சென்றிருக்கும் ரஜினி, திரும்பி வந்ததும் இந்தப்படத்தின் அறிவிப்பும் உடனடியாகப் படப்பிடிப்பும் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

ரஜினி சம்மதம் சொன்னதால் ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் தேசிங்கு பெரியசாமி உள்ளிட்டோர் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்களாம்.

Related Posts