நடிகர் தங்கதுரையின் நற்பணி – ரஜினி உள்ளிட்ட பலர் பாராட்டு

லால்சலாம், தீயவர் குலை நடுங்க, சலூன், ஹரீஷ்கல்யாணின் டீசல், பிரபுதேவா படம், அஜயன்பாலா இயக்கும் மைலாஞ்சி, வெற்றி நாயகனாக நடிக்கும் படம், வைபவ் நாயகனாக நடிக்கும் படம் உட்பட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துக் கொண்டிருப்பவர் தங்கதுரை.
தொலைக்காட்சியிலிருந்து திரைத்துறைக்கு வந்து வெற்றி பெற்ற சந்தானம், சிவகார்த்திகேயன், கவின் வரிசையில் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார் தங்கதுரை. சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் இப்போது படம் முழுக்க வரும் நகைச்சுவை நடிகராகியிருக்கிறார்.தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறார்.
இந்நிலையில் 2024 ஆண்டு பிறந்தவுடன் ஒரு நற்செயலைத் தொடங்கியிருக்கிறார்.அது என்ன?
அதுகுறித்து அவரே சொல்கிறார்……
கடந்த சில மாதங்களுக்கு முன் பசுமை நாயகன் நடிகர் விவேக் சாரின் மரம் வளர்ப்பை மக்களிடம் எடுத்துச் செல்லலாம் என முடிவெடுத்தேன். இதை தலைவர் ரஜினிகாந்த் சாரிடம் சொல்லி வாழ்த்துப் பெற்று இந்த வருடத்தில் இருந்து மரம் வளர்ப்பை ஆரம்பித்திருக்கிறேன்.
அப்துல்கலாம் ஐயா வழியில் விவேக் சாரின் ஆசியோடு தொடர்ந்து வருடத்துக்கு குறைந்தது 30,000 மரக்கன்றுகள் நட இருக்கிறேன்.
உத்வேகம் கொடுத்த மக்களுக்கு நன்றி.
மரம் வளர்ப்போம், இயற்கை வளம் காப்போம்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
இன்றைக்கு உலகையே அச்சுறுத்தும் மிகப்பெரும் ஆபத்து புவிவெப்பமாதல். இதனால் இயற்கையின் சமநிலை சீர்குலைந்திருக்கிறது. இதன்விளைவுதான் அண்மையில் தமிழ்நாட்டைத் தாக்கிய புயல் மழை வெள்ளம் என அறிவியலாளர்கள் சொல்கின்றனர்.
இதனால் புவிவெப்பமாதலைக் குறைக்க சூழலியலாளர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் நடிகராகப் பெயரும் புகழும் சம்பாதிப்பதோடு நில்லாமல் நாட்டுக்காக நம்மாலான நற்பணியைச் செய்ய முன்வந்திருக்கும் நடிகர் தங்கதுரையைப் பலரும் பாராட்டிவருகிறார்கள்.