September 10, 2025
விமர்சனம்

மாருதிநகர் போலிஸ் ஸ்டேசன் – திரைப்பட விமர்சனம்

ஒரு கொலை நடக்கும், அது எப்படி நடந்தது? அதைச் செய்தவர் யார்? அவருடைய நோக்கம் என்ன? என்பதைச் சொல்லும் வரிசையில் வந்திருக்கும் படம் மாருதிநகர் போலிஸ் ஸ்டேசன்.

இந்தப்படத்தில் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளரே கொலை செய்யப்படுகிறார். அவரோடு சேர்ந்து ஒரு ரவுடியும் கொலை செய்யப்படுகிறார்.

இவர்களைக் கொன்றது யார்? என்று காவல்துறை உயரதிகாரி ஆரவ், துப்பறிகிறார்.

ஆரவ்வின் உயரத்துக்கும் உருவத்துக்கும் காவலதிகாரி வேடம் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. நடிப்பிலும் கம்பீரம் காட்டியிருக்கிறார். கண்களால் பயமுறுத்துகிறார்.

உதவி ஆய்வாளராக நடித்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். ஆய்வாளரைக் கொலை செய்யத் திட்டமிடுவதும், அவர் கொலையானதும் குழப்பமடைவது, விசாரணையின் போது பதட்டப்படுவதி எனப் பல வகையிலும் நிறைவாக இருக்கிறார்.

சந்தோஷ் பிரதாப்,வில்லனாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, விவேக் ராஜகோபாலன், யாசர், அமித் பார்கவ் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.

சேகர் சந்திராவின் ஒளிப்பதிவில் குறைந்த ஒளியிலும் நிறைந்த காட்சிகள், கதைக்கு அளவாக அமைந்திருக்கிறது.

மணிகாந்த் கத்ரி இசையமைப்பில் பாடல்கள், கதைக்கேற்ப இருக்கின்றன. பின்னணி இசையில் படத்தின் தரத்தைக் கூட்டியிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் தயாள் பத்மநாபன், நல்ஸ கதை, திறமையான நடிகர்கள் இருந்தும் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகைப் படத்துக்கான பரபரப்பு குறைவாக இருப்பது பலவீனம்.

– குமார்

குறிப்பு – இப்படம் ஆஹா இணையதளத்தில் காணக்கிடைக்கிறது.

Related Posts