யோகிபாபு நடித்துள்ள குய்கோ – நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ்
எம்.மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி,யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஆண்டவன்கட்டளை திரைப்படத்தில் திரைக்கதை வசனம் எழுதியிருந்தவர் அருள்செழியன்.இவர், ஜூனியர்விகடன் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணியாற்றிப் புகழ்பெற்றவர் .
இப்போது,விதார்த், யோகிபாபு ஆகியோரைக் கதாநாயகர்களாக வைத்து ஒரு படத்தை எழுதி இயக்கியுள்ளார்.படத்தின் பெயர் குய்கோ. குடியிருந்தகோயில் என்பதன் சுருக்கம்தான் இப்பெயர். அப்படத்தில் யோகிபாபுவுடன் சாய்பிரியங்கா, விதார்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப்படத்துக்கு ராஜேஷ்யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடகராகப் புகழ்பெற்றிருக்கும் ஆண்டனிதாசன் இசையமைத்துள்ளார்.ராம்பாண்டியன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனித்துள்ளார்.
காதல், தாய்ப்பாசம் ஆகியனவற்றிற்கு முக்கியத்துவம் உள்ள கதையை நகைச்சுவை அம்சம் கலந்து சொல்லியிருக்கிறார்களாம்.
இப்படத்தை ஏஎஸ்டி ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வையை நவம்பர் ஒன்றாம் தேதி காலை 11 மணிவாக்கில் நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார்.
அதன்பின் இப்படத்தின் பாடல்கள் சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இந்நிலையில், இந்தப்படம் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இதேதேதியில் விக்ரம் நடித்துள்ள துருவநட்சத்திரம், சந்தானம் நடித்துள்ள பில்டப், ரியோராஜ் நடித்துள்ள ஜோ,ரிச்சர்ட்ரிஷி நடித்துள்ள சிலநொடிகளில் ஆகிய படங்கள் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இவற்றோடு இந்தப்படமும் இணையவிருக்கிறது.
எத்தனை படங்கள் வந்தாலும் எங்கள் படம் தனித்துத் தெரியும் என்று குய்கோ படக்குழுவினர் நம்பிக்கையாகச் சொல்கின்றனர்.படத்தின் மீதான நம்பிக்கையில் படக்குழுவினர் இதைச் சொல்கின்றனர்.
ஒரு படத்தை உருவாக்குவதை விட அதைச் சரியான முறையில் வெளியிட்டால்தான் வெற்றி வசமாகும்.அந்தவகையிலும் இந்தப்படத்துக்கு நன்மை நடந்திருக்கிறது. இப்படத்தைத் தமிழ்நாடெங்கும் திரையரங்குகளில் வெளியிடும் வேலையை ரெட்ஜெயன்ட் நிறுவனம் செய்யவிருக்கிறது.
இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.











