பிக்பாஸில் கவின் விளம்பரங்களில் முந்தும் ப்ளடிபெக்கர் – விவரம்
இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு ஜெயம்ரவி நடித்துள்ள பிரதர், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் மற்றும்
கவின் நடிப்பில் உருவாகியுள்ள ப்ளடி பெக்கர் ஆகிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.இவற்றோடு துல்கர்சல்மான் நடித்துள்ள மலையாளப்படமான லக்கிபாஸ்கர் படம் தமிழிலும் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் இப்படங்களை விளம்பரப்படுத்தும் பணிகளும் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யும் பணிகளும் தற்போது நடந்து வருகின்றன.
அமரன் மற்றும் பிரதர் ஆகிய படங்களை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.அதோடு லக்கிபாஸ்கர் படத்தையும் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிட்டுத் தர வேண்டும் எனக்கேட்டு ரெட்ஜெயண்ட் நிறுவனத்தை அணுகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அப்படியானால் ப்ளடிபெக்கர் திரைப்படத்துக்குத் திரையரங்குகள் கிடைப்பதே கடினமாகிவிடுமே? இது குறித்து விசாரித்தால்,ப்ளடிபெக்கர் படத்தை தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ஃபைவ்ஸ்டார் செந்தில் குழுவினர் பெற்றிருக்கிறார்கள்.
கருடன்,மகாராஜா உள்ளிட்டு சில வெற்றிப்படங்கள் உட்பட தொடர்ந்து திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.எனவே அவர்களுக்கான திரையரங்குகளில் ப்ளடிபெக்கர் படம் திரையிடப்படும் என்று சொல்கிறார்கள்.
இதுவரை சுமார் இருநூற்றைம்பது திரையரங்குகள் வரை ஒப்பந்தம் போடப்பட்டிருக்கின்றன என்றும் இன்னும் போகப்போக அவை முன்னூறு அல்லது அதைத்தாண்டியும் போகலாம் என்றும் சொல்கிறார்கள்.ஏனெனில் மற்ற படங்களைக் காட்டிலும் இப்படத்தின் பக்கம் கவனத்தைத் திருப்பும் வண்ணம்,இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் இப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் நெல்சன் வெகு முனைப்புடன் செயல்பட்டு வருகிறாராம்.
சன் தொலைக்காட்சியில் வரிசையாக விளம்பர நிகழ்ச்சிகள் வெளியாகவிருக்கின்றன.அவற்றின் படப்பிடிப்புகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றனவாம்.
இன்னொரு பக்கம் விஜய் தொலைக்காட்சியிலும் இப்படத்தை விளம்பரப்படுத்த சில முக்கிய நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
குறிப்பாக விஜய்சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ப்ளடிபெக்கர் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடக்கவிருக்கிறதாம்.அதில் படத்தின் நாயகன் கவின் கலந்துகொள்ளவிருக்கிறாராம்.
கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்.இப்போது மீண்டும் அந்நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார் என்பது அந்நிகழ்ச்சியின் பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி மற்றோருக்கும் ஆர்வம் தூண்டுவதாக அமையும் என்கிறார்கள்.
இப்படி, திரையரங்குகள் ஒப்பந்தம் மற்றும் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் ஆகியனவற்றில் மற்ற படங்களை விட ப்ளடிபெக்கர் படம் முந்தி நிற்கிறது என்று சொல்கிறார்கள்.










