ஆர்.ஜே.பாலாஜி பிடிவாதம் – கருப்பு தவிப்பு

ரெட்ரோ படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சூர்யாவுடன் த்ரிஷா, ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.அண்மையில் வெளியான படத்தின் காட்சிகள் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
கடந்த ஆண்டு நவம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.அதனால் இவ்வாண்டு ஆயுதபூசையையொட்டி அக்டோபர் முதலில் படம் வெளியாகிவிடும் என்று சொல்லப்பட்டது.அதன்பின் அக்டோபர் 20 தீபாவளியையொட்டி வெளியாகும் என்று சொல்லப்பட்டது.
இரண்டுமே நடக்காது என்பதுதான் இப்போதைய நிலை.ஏனெனில் இப்படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமை விற்பனை நடக்கவில்லை அதனால் வெளியீட்டுத் தேதியை உறுதி செய்யாமல் இருக்கிறார்கள் என்பதுதான் திரையுலக வட்டாரங்களில் உலவும் தகவல்.
இப்படம் பற்றி இதைத்தாண்டி இன்னொரு சூடான தகவலும் உலவிக் கொண்டிருக்கிறது.
அது என்ன?
இப்படம் தொடங்கும்போது, ஆர்.ஜே.பாலாஜி திரைக்கதை எழுத வருடக் கணக்கில் நேரம் எடுத்துக் கொள்வார். ஆனால் படப்பிடிப்பை எழுபது முதல் எண்பது நாட்களுக்குள் முடித்துவிடுவார்.சூர்யா போன்ற ஒரு பெரிய நடிகரை வைத்து இவ்வளவு விரைவாகப் படத்தை எடுத்து முடித்துவிட்டாலே அப்படத்தில் இலாபம் பார்த்துவிடலாம்.
இதற்கு முந்தைய படமான சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு சுமார் தொண்ணூறு நாட்கள் இருக்கும் என்று சொன்ன இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்,பத்து நாட்கள் முன்னதாக அதாவது எண்பது நாட்களிலேயே படப்பிடிப்பை முடித்துவிட்டார்.
ஆர்.ஜே.பாலாஜியும் படப்பிடிப்பு நாட்கள் குறித்து கொடுத்த உறுதிமொழி காரணமாகவே அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.
ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே ஆர்ஜே.பாலாஜிக்கும் தயாரிப்புத் தரப்புக்கும் நிறைய கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டுவிட்டன.படப்பிடிப்புக்காக கேட்கிற வசதிகளை தயாரிப்புத் தரப்பு செய்துதரவில்லை என்பது இயக்குநர் தரப்பின் குற்றச்சாட்டு.
அதற்கு விடையாக,சூர்யா நடிக்கும் படத்தில் கேட்கும் வசதிகளை தயாரிப்புத்தரப்பு செய்யவில்லை என்பதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டது.
ஆனாலும் ஏதோவொரு சிக்கல் இருந்து கொண்டேயிருந்தது என்கிறார்கள்.
இந்நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று சொல்லப்ப்ட்டது.
அதிலும் ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறதாம்.
படத்தை முழுமையாகத் தொகுத்துப் பார்த்தபோது ஆர்.ஜே.பாலாஜிக்கு அது நிறைவாக இல்லையாம்.அதனால் சுமார் பதினைந்து நாட்கள் முதல் இருபது நாட்கள் வரை திரும்ப படப்பிடிப்பு நடத்தவேண்டும் அதாவது ரீஷூட் செய்யவேண்டும் என்று அவர் சொல்லியிருக்கிறார்.
அதிர்ந்துபோன தயாரிப்புத் தரப்பு இதை ஏற்றுக்கொள்ளவில்லையாம்.இருக்கிற காட்சிகளே நிறைவாக இருக்கின்றன,இவற்றை வைத்தே படத்தை முடித்துக் கொடுங்கள் என்று சொல்லிவிட்டார்களாம்.
ஆனால் ஆர்.ஜே.பாலாஜி திருப்தியடையாமல் மீண்டும் படப்பிடிப்பு நடத்தியாக வேண்டும் என்கிறாராம்.இதுதொடர்பான பேச்சுகள் நடந்துகொண்டிருக்கின்றன என்கிறார்கள்.
என்ன நடக்கப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.