செல்வராகவன் தனுஷின் காதல் கொண்டேன் மறுவெளியீடு – விவரம்
நடிகர் தனுஷ் இப்போது 55 படங்கள் நடித்துவிட்டார்.அவருடைய இரண்டாவது படமாக சூலை 4,2003 அன்று வெளியான படம் காதல் கொண்டேன்.
அவருடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் அக்கா விமலகீதா தயாரிப்பில் உருவானது அந்தப்படம்.சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார்.சுதீப்,டேனியல் பாலாஜி, மூத்த நடிகர் நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப்படத்துக்கு யுபன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
அந்தக் காலத்தில், பெரிய அளவில் விளம்பரங்கள் எதுவும் செய்யாமல்,இன்னும் சொல்லப்போனால் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு கூட நடத்தாமல் நேரடியாகத் திரையரங்குகளுக்கு அந்தப்படம் வந்தது.
யாரும் எதிர்பாராத வகையில் அப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.பணக்கார வீட்டுப் பையன்,வெள்ளை வெளேரென இருக்கும் சுதீப் ஒருபக்கம்,ஒல்லியாக, கன்னங்கள் ஒடுக்குண்டு, பக்கத்துவிட்டுப் பையன் போல் இருந்த தனுஷ் இன்னொரு பக்கம் என இருந்த அந்தப்படத்தில் தனுஷுக்குப் பெரிய பெயர் கிடைத்தது.அவருடைய நடனம்,நடிப்பு ஆகியன இளைஞர்களால் கொண்டாடப்பட்டது.
அப்படத்தின் பாடல்கள் சில ஆண்டுகள் எங்கெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தன.அன்பு அன்பு அளவற்ற அன்பு,மாசற்ற அன்பு மட்டுமே அந்தத் திரைக்கதையின் அடிநாதமாக இருந்தது.அது வெகுமக்களிடையே சரியாகச் சென்று சேர்ந்து பெரும் வணிக வெற்றியைப் பெற்றது.
இடையில் சில காலம் சரிந்திருந்த கஸ்தூரிராஜாவை மீண்டும் தலைநிமிர வைத்தது.
இப்போது எதற்கு இந்தப் பழங்கதை?
காரணம் இருக்கிறது.
காதல் கொண்டேன் படத்தை நவீன தொழில் நுட்ப உதவிகளுடன் மெருகேற்றி மீண்டும் வெளியிடும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
2003 ஆம் ஆண்டு அப்படத்தைத் தயாரித்த, இயக்குநர் கஸ்தூரி ராஜா இப்போது அந்தப் படத்தை மெருகேற்றி மீண்டும் வெளியிடும் வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.அவருடைய மேற்பார்வையிலேயே வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றனவாம்.
அந்தப் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கின்றனவாம்.விரைந்து வேலைகளை முடித்து சரியான வெளியீட்டுத் தேதி பார்த்து வெளியிடத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாராம்.
இருபத்திமூன்று ஆண்டுகளுக்குப் பின் வெளியானாலும் அந்தப்படத்தின் நாயகன் தனுஷின் கதாபாத்திர வடிவமைப்பும் அவருடைய நடிப்பும் அந்தப்படம் வெளியான நேரத்தில் பிறந்து இப்போது இளம்வயதினராக இருக்கும் இளைஞர்கள் மற்றும் யுவதிகளை ஈர்க்கும் என்று உறுதியாக நம்பி படத்தை வெளியிடும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள்.











