சிக்மா படத்தில் விஜய் மகன் ஜேசன்சஞ்சய் நடிப்பும் நடனமும் – புதிய தகவல்
ஆகஸ்ட் 28,2023 அன்று லைகா நிறுவனம் வெளியிட்ட ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.அதில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருந்தது.
நடிகர் விஜய் சங்கீதா தம்பதியின் மகன் ஜேசன் சஞ்சய், கல்லூரிப் படிப்பு முடித்த பிறகு கனடா சென்று திரைப்பட இயக்கம், திரைக்கதை அமைப்பு மற்றும் திரைப்படத்தொழில்நுட்பங்கள் தொடர்பான படிப்புகளை படித்து வந்தார். பிறகு ஆங்கிலத்தில் குறும்படங்களையும் இயக்கினார்.
2009 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் விஜய்யுடன் சேர்ந்து நடனமாடியிருந்தார் ஜேசன் சஞ்சய். அதனால் அவர் நடிகராக வருவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு சிறு வயது முதலே இயக்குநராகும் ஆசை இருந்துள்ளது. அவர் வளர்ந்ததும் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஆனால் அவற்றையெல்லாம் ஜேசன் மறுத்து வந்தார். தனது விருப்பப்படி இயக்குநர் ஆகியிருக்கிறார் ஜேசன்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தை கதை, திரைக்கதை எழுதி ஜேசன் சஞ்சய் இயக்க உள்ளார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான தகவலை ஆகஸ்ட் 28 அன்று அறிவித்தார்கள்.
இதில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை நவம்பர் 10,2025 அன்று வெளியானது.
படத்திற்கு ‘சிக்மா’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு உள்பட பன்மொழியில் உருவாகும் இப்படம் பற்றி ஜேசன் சஞ்சய் அப்போது கூறும்போது,
பயமில்லாத, சுதந்திரமான, சமூகத்தால் முழுமையாக புரிந்து கொள்ளபடாத ஒருவன் தன் இலக்குகளை நோக்கி நகர்வதை இந்தப் படம் பேசும். வேட்டை, கொள்ளை, காமெடி என இந்தப் படம் பரபரப்பான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும்.
தமனின் துடிப்பான இசையும் சந்தீப் கிஷனின் திறமையான நடிப்பும் லைகாவின் பிரம்மாண்டமான தயாரிப்பும் நிச்சயம் மறக்க முடியாத படமாக மாற்றும். 95 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது
என்று கூறியிருந்தார்.
இப்போது அந்த ஒரு பாடலும் படமாக்கப்பட்டுவிட்டதாம்.
அந்தப்பாடலில் நடிகை கேத்தரின் தெரசா நடனமாடியிருக்கிறார்.அவரை மையமாக வைத்து குத்துப்பாடலாக உருவாகியிருக்கும் அந்தப்பாடலில் நாயகன் நாயகியும் நடனமாடியிருக்கிறார்கள் என்பதோடு இயக்குநர் ஜேசன் சஞ்சய்யும் நடனமாடியிருக்கிறார் என்பதுதான் சிறப்புச் செய்தி.
படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் அவர் நடித்திருக்கிறார் என்பதோடு பாடலில் நடனமாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.பாடலைப் படமாக்கிவிட்டுப் பார்த்தபோது ஜேசன் சஞ்சய் நடனம் மிகச் சிறப்பாக அமைந்திருப்பதாக அனைவரும் கூறுகின்றனர்.
இதனால் இந்தப்படத்துக்குப் பிறகு அவரைத் தேடி இயக்குநர் வாய்ப்புகள் வருவதைக் காட்டிலும் முன்புபோலவே நாயகன் வாய்ப்புகள் அதிகம் வரும் என்கிறார்கள்.











