ஜனநாயகன் – தநா உரிமையில் மாற்றம் கேரள உரிமை விலை குறைந்தது
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் 2026 சனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இப்படத்தை பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
வெளியீட்டுத் தேதி அறிவித்து பல மாதங்கள் ஆனபின்னும் அப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமை விற்பனையில் பெரும் இழுபறி நீடித்து வந்தது.
இந்தப்படத்துக்கு தயாரிப்பு நிறுவனம் சொன்ன விலை சுமார் 120 கோடி.விஜய்யின் முந்தைய படமான தி கோட் தமிழ்நாட்டில் சுமார் 103 கோடி தயாரிப்பாளரின் பங்காகக் கொடுத்தது என்பதால் ஜனநாயகன் விலை 120 கோடி என்பது நிறுவனத்தின் கணக்காக இருந்தது.
ஆனால், இந்த விலை அதிகம் என்று சொல்லி யாரும் வாங்க முன்வரவில்லை.
இதனால், விஜய்யுடன் இருக்கும் ஜெகதீஷ் என்பவர், ரோமியோ பிக்சர்ஸ் ராகுலை அழைத்துக் கொண்டுபோய், விஜய் இவருக்கு தமிழ்நாடு உரிமையைக் கொடுக்கச் சொன்னார் என்று சொல்லியிருக்கிறார்.
தமிழ்நாடு உரிமை சுமார் 87 கோடி என்று விலைபேசி அதில், ஐம்பது கோடி முன் தொகை கொடுத்தால் ஒப்பந்தம் போட்டுவிடலாம் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.பேச்சுவார்த்தை நடத்தி பல மாதங்கள் ஆகிவிட்டபோதும் ராகுலால் சொன்னபடி பணம் கொடுக்க முடியவில்லையாம்.அதனால் அவருக்குப் படம் கொடுக்காமல் படத்தைப் பிரித்து விற்கும் முடிவை எடுத்தார்கள்.
அதன்படி, சென்னை உரிமை சுமார் 8 கோடிக்கு தேனாண்டாள் முரளியின் உறவினர் ராமு பெற்றிருக்கிறார்.வட ஆற்காடு தென்னாற்காடு பகுதிகள் சீனு என்பவருக்கு 14 கோடிக்கும்,திருச்சி,மதுரை,சேலம் ஆகிய மூன்று பகுதிகள் ஃபைவ் ஸ்டார் செந்தில் நாராயணசாமி ஆகியோருக்கு சுமார் 36.50 கோடிக்கும் கோவை பகுதி மன்னார் என்பவருக்கு சுமார் 16 கோடிக்கும் திருநெல்வேலி பிரதாப் என்பவருக்கு சுமார் 7 கோடிக்கும் கொடுத்திருக்கிறார்கள். செங்கல்பட்டுக்கு சுமார் 25 கோடி விலை சொல்கிறார்கள்.
இன்றைய தேதியில் செங்கல்பட்டு பகுதி மட்டும் இன்னும் முடிவாகாமல் இருக்கிறதாம்.
இந்நிலையில், இப்படத்தின் கேரளா உரிமை விலை சுமார் 20 கோடி என்று சொல்லியிருக்கிறார்கள்.ஆனால் அந்த விலைக்கு யாரும் வாங்க முன்வரவில்லை என்பதால் 15 கோடி என்று விலையைக் குறைத்தார்கள்.அதற்கும் யாரும் முன்வராததால் இப்போது 13 கோடிக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
கேரளாவைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கேரள உரிமையைப் பெற்றிருக்கிறார்.
தமிழ்நாட்டில் பிரித்துக் கொடுத்ததால் கூடுதல் பணம் கிடைத்தது.அதேநேரம் கேரளாவில் வெகுவாகக் குறைந்துவிட்டது.இதனால் படநிறுவனம் வருத்தத்தில் இருக்கிறது என்கிறார்கள்.











