இந்தியன் 2 – மீண்டும் வரும் ஒளிப்பதிவாளர்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு, ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ், சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்திலிருந்து நூலிழையில் படக்குழுவினர் பலரும் உயிர் தப்பினர்.
பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி அரங்கில் இந்த விபத்து நடந்தது.
இவ்விபத்து நடந்த அடுத்த மாதமே கொரோனா ஊரடங்கு தொடங்கியதால் படப்பிடிப்பு மொத்தமாக நின்றது.
அதன்பின் பல்வேறு இடையூறுகளைக் கடந்து இரண்டாண்டுகளுக்குப் பின் இப்போது மீண்டும் இந்தியன் 2 படத்தின் வேலைகள் தொடங்கியிருக்கின்றன.
ஷங்கர் இப்போது ராம்சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். ஐதராபாத்தில் இன்னும் ஒரு மாதம் அப்படத்தின் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம்.
அதை முடித்துவிட்டு இந்தியன் 2 படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுவருகிறாராம் ஷங்கர்.
இந்தப்படத்துக்கு ரத்னவேல் ஒளிப்பதிவு செய்துவந்தார். அவர் இப்போது ஷங்கர் இயக்கும் தெலுங்குப்படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துகொண்டிருக்கிறார்.
இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துகொள்ளவியலாத சூழலில் இருக்கிறாராம் ரத்னவேல்.
அதனால்,ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் மாதம் தொடங்கவிருக்கும் இந்தியன் 2 படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.
இந்தப்படம் தொடங்கும் நேரத்திலும் இவர்தான் ஒளிப்பதிவாளராக இருந்தார். படப்பிடிப்பு தாமதமானதால் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட பொன்னியின் செல்வன் படத்துக்குப் போய்விட்டார். அதனால் இந்தியன் 2 படத்துக்கு ரத்னவேல் ஒளிப்பதிவாளராக வந்தார்.
இப்போது மீண்டும் ரவிவர்மனே ஒளிப்பதிவாளராகியிருக்கிறார்.











