விமர்சனம்

தாதா 87 – திரைப்பட விமர்சனம்

சாருஹாசன் 87 வயதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்று விளம்பரம் செய்யப்பட்டாலும் படத்தின் மையக்கதையில் அவர் இல்லை. மையக்கதையின் கருத்துக்கு வலுச்சேர்க்கும் வேடத்தில் நடித்துள்ளார்.

87 வயதிலும் மிடுக்குடன் தாதாவாக வலம் வருகிறார். கண்களை அகல விரித்து அவர் பார்க்கும் பார்வையிலேயே எதிரிகள் பயப்படுகிறார்கள். காதல் பார்வையிலும் கவர்கிறார் இந்த தாதா.

அவருடைய காதலியாக வரும் சரோஜா (நடிகை கீர்த்திசுரேஷின் பாட்டி) சில காட்சிகளில் வந்தாலும் நன்று.

படத்தின் உண்மையான நாயகன் ஆனந்த்பாண்டி. ஒரு குடியிருப்பில் வசிக்கும் நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதையே வேலையாக வைத்திருக்கிறார்.

யாரையாவது காதலித்துவிட வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார். சில பெண்களைக் கடந்து கடைசியில் நாயகி ஸ்ரீபல்லவியைக் காதலிக்கிறார். முதலில் வெறுக்கும் நாயகி பின்பு நாயகனைக் காதலிக்கிறார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு சிக்கல் வருகிறது. அது என்ன? அந்தச் சிக்கல் தீர்ந்ததா? என்பதற்கான விடைதான் தாதா 87.

ஆனந்த்பாண்டி நன்றாக நடித்திருக்கிறார். நன்றாக நடனம் ஆடுகிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீபல்லவியும் நல்வரவு. முதல் படத்திலேயே கனமான வேடம். அதற்கு நியாயமாக நடித்திருக்கிறார்.

நாயகனின் நண்பராக வருகிற கதிர், நாயகியின் அப்பா ஜனகராஜ், நாயகனின் அப்பா மாரிமுத்து ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள். காட்டான் என்கிற பெயரில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இயக்குநர் விஜய்ஸ்ரீ தொடர்ந்து நடிக்கலாம்.

ஒரு புதிய விசயத்தைக் கையிலெடுத்திருக்கும் இயக்குநருக்கு அதில் போதிய தெளிவில்லை என்பது புரிகிறது. படத்தின் திரைக்கதையிலும் நிறைய குழப்பங்கள். படம் நெடுகிலும் சத்தமும் அதிகம்.

நடைமுறை சாத்தியமா? என்கிற கேள்வி வந்தாலும் இறுதிக்காட்சி புதுமையாக இருக்கிறது.

Related Posts