சினிமா செய்திகள்

கூலி பட வியாபாரம் – வியக்க வைக்கும் கணக்கு

நடிகர் ரஜினிகாந்த் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இப்படத்தில் மலையாள நடிகர் சவுபின் ஷாயிர்,தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ்,கன்னட நடிகர் உபேந்திரா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.இந்தி நடிகர் அமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அன்பறிவு சண்டைப்பயிற்சி இயக்குநர்களாகப் பணியாற்றுகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

கூலி’ படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் இப்படத்தின் வியாபாரம் தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக திரையுலகம் வியக்கும் வண்ணம் இப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமை விற்பனை நடந்துள்ளது.
இப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை ஐங்கரன் இண்டர்நேசனல் நிறுவனத்தின் கருணாமூர்த்தி பெற்றிருக்கிறார்.
இதற்கான விலை சுமார் எழுபத்தைந்து கோடி.இந்த வியாபாரம் எம்ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி அடிப்படையில் நடந்துள்ளது என்கிறார்கள்.

இந்தப்படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியிட சுமார் நாற்பத்து இரண்டு கோடி வரை கொடுக்க முன்வந்திருக்கிறார்களாம்.

அதேபோல் கேரளா வெளியீட்டு உரிமைக்காக சுமார் 20 கோடி வரை கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். கர்நாடகா உரிமைக்கு சுமார் இருபது கோடி கொடுக்கிறோம் என்று கேட்டிருக்கிறார்களாம்.இந்தி மற்றும் வட இந்திய உரிமை சுமார் ஐம்பது கோடி என்று சொல்லப்படுகிறது.

தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமை சுமார் நூறு முதல் நூற்றுப்பத்து வரை விற்கும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இவை தவிர இப்படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமை சுமார் 125 கோடிக்கும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மதிப்பு சுமார் 75 கோடி என்றும் சொல்லப்படுகிறது. பாடல் உரிமை சுமார் முப்பது கோடி.இவற்றில் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் பாடல் உரிமை ஆகியனவற்றைப் படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சகோதர நிறுவனங்களே பெறுகின்றன.ஆனாலும் அவற்றின் சந்தை மதிப்புப்படி கணக்கிடப்பட்டிருக்கின்றன.

இவை அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால் சுமார் ஐநூற்றி நாற்பத்தேழு கோடி ஆகிறது.

இவை இறுதி செய்யப்படும் போது இவற்றில் ஓரிரு கோடிகள் முன்பின்னாக இருக்கலாம்.பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

தமிழ்த் திரைப்படங்களில் வெளியீட்டுக்கு முன்பு இவ்வளவு பெரிய வியாபாரம் இதுவரை நடந்ததில்லை என்று வியாபார வட்டத்தினர் சொல்கிறார்கள்.

Related Posts