அடுத்த ட்வீட்டில் தனுஷைப் பாராட்டிய சேரன் – இரசிகர்கள் மகிழ்ச்சி
வசந்தபாலன் இயக்கியுள்ள ‘ஜெயில்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பதுடன் இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் பணியாற்றியுள்ளார். நடிகர் ஆர்யா பங்குபெற்ற ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபர்ணதி இந்தப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
ஜெயில் திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் மற்றும் நடிகை அதிதி ராவ் இணைந்து பாடிய ‘காத்தோடு காத்தானேன்’ என்னும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்தப்பாடலை கபிலன் எழுதியுள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் சேரன் தன் ட்விட்டர் பக்கத்தில்,இயக்குநர் வசந்தபாலனின் ஜெயில் படத்தின் பாடல் கேட்டேன்.. ஜீவியின் இசையும் கபிலனின் வரிகளும் இந்த லாக்டவுனில் அழுத்தம் கூடியிருக்கும் மனதை விடுவிக்கிறது.. கேளுங்கள். பாருங்கள்.. காட்சிகள் மனதினுள் இளங்காற்றாய்….
என்று பாராட்டியிருந்தார்.
அவருடைய பாராட்டில் பாடலைப்பாடிய தனுஷ் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் தனுஷையும் பாராட்டலாமே, அவரை ஏன் பாராட்டவில்லை என்று இரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனால், மீண்டும் ஒரு ட்வீட்டில்,
இந்தப்பாடலை தனுஷ் அவர்கள் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நல்ல நடிகர் நல்ல கதாசிரியர் நல்ல இயக்குநர் நல்ல கவிஞர் என முன்பே நிரூபித்திருக்கிறார். இப்பாடல் பாடியதில் நல்ல பாடகராகவும் தன்னை முன் நிறுத்தியுள்ளார்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் சேரன்.
இதனால் முன்பு கேள்வி கேட்ட இரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.











