இலாபத்தில் பைசன் உயர்ந்தது துருவ்வின் மதிப்பு – படக்குழு மகிழ்ச்சி
இவ்வாண்டு தீபாவளியையொட்டி அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான படம் பைசன் காளமாடன்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் துருவ் விக்ரம கதாநாயகனாக நடித்திருக்கிறார்.அவருடன் அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, அமீர்,கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம்பெருமாள் மற்றும் அருவி மதன் உட்பட பலர் நடித்திருக்கின்றனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப்படத்துக்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தை மும்பையைச் சேர்ந்த அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா.இரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.
இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ஃபைவ்ஸ்டார் செந்தில் பெற்றிருந்தார்.எம்ஜி எனச் சொல்லப்படும் குறைந்தபட்ச பாதுகாப்பு அடிப்படையில் இந்த வியாபாரம் நடந்தது.
இதற்கான விலை சுமார் பதினைந்து கோடி,
வெளியீட்டுக்குச் சில மாதங்கள் முன்பே இந்த வியாபாரம் நடந்தது.
அப்போது பலரும் பயமுறுத்தியதாகச் சொல்லப்பட்டது.மாரி செல்வராஜ் படங்கள் எல்லாம் அரசியல் கலந்திருப்பவை அவை ஓடினால் ஆச்சு இல்லையெனில் போச்சு என்று சொல்லி பயமுறுத்தியிருக்கிறார்கள்.
ஆனால் அவற்றை மீறி துணிச்சலுடன் இவ்வளவு தொகை கொடுத்து படத்தை வாங்கினார்கள்.
அதன்பின், அதேநாளில் பிரதீப் ரங்கநாதனின் ட்யூட் படம் வெளியாகிறது, இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் கண்டுகளிக்கும் படமாக அதுதான் இருக்கும் அதனால் பைசன் படத்துக்கு கூட்டம் வருவது சந்தேகமே என்றெல்லாம் சொன்னார்கள்.
இவை எல்லாவற்றையும் தாண்டி பைசன் வெளியானது. வெளியான நாள் முதலே இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் நல்ல வசூலைக் கொடுத்தது.
அப்போதும் விடுமுறை நாள் என்பதால் கூட்டம் வருகிறது.விடுமுறை முடிந்தவுடன் கூட்டம் வராது என்று சொன்னார்கள்.
ஆனால்,விடுமுறை நாட்களைத் தாண்டி வேலை நாட்களிலும் வசூலில் பெரிய பாதிப்பைச் சந்திக்காமல் இருந்தது பைசன்.
இதனால் முதல் ஏழு நாட்களில் அதாவது நேற்றுவரை வந்த வசூலில் விநியோகஸ்தர் போட்ட தொகை வந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது.
ஏழு நாட்களில் மொத்த வசூல் சுமார் முப்பத்தைந்து கோடி என்றும் இதில் வரியெல்லாம் போக விநியோகஸ்தர்கள் போட்ட தொகையான பதினைந்து கோடி கிடைத்துவிட்டது என்றும் சொல்கிறார்கள்.
இன்று முதல் இப்படம் ஓடிமுடியும் வரை வரும் வசூல் எல்லாம் இலாபக் கணக்கில் சேரும் என்றும் அந்த இலாபத்தை தயாரிப்பு நிறுவனம் மற்றும் விநியோகஸ்தர் ஆகியோர் பகிர்ந்து கொள்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இதன் உடனடி விளைவாக படத்தின் நாயகன் துருவ் விக்ரமின் சந்தை மதிப்பு சட்டென உயர்ந்திருக்கிறது என்கிறார்கள்.இதனால் நாயகன், இயக்குநர்,தயாரிப்பு நிறுவனம் ஆகியன மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.











