December 5, 2025
சினிமா செய்திகள்

டிசம்பர் 8 இல் அரசன் படப்பிடிப்பு – விவரம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்பதை ஜூன் 30 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வெற்றிமாறன்.அக்டோபர் 7 அன்று அப்படத்தின் பெயர் வெளியிடப்பட்டது.அதன்படி படத்துக்கு அரசன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

வெற்றிமாறன் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த வடசென்னைக்கு முந்தையதான ராஜன் வகையறா திரைக்கதைதான் படமாகவிருக்கிறது என்று சொல்லப்பட்டது.அதற்கேற்ப ராஜன் என்கிற பெயரின் தூயதமிழ் வடிவமான அரசன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

அப்போதே அக்டோபர் 17 முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டது.ஆனால் படப்பிடிப்புக்குப் பதிலாக அரசன் பட முன்னோட்டம் வெளியானது.

பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த முன்னோட்டம் வெளியான நேரத்தில் நவம்பர் மாத தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டது.

ஆனால், இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான மாஸ்க் பட வெளியீட்டு வேலைகளில் அவர் தீவிரமாக இருந்ததால் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

அப்பட விளம்பர நிகழ்வின்போது அரசன் படப்பிடிப்பு எப்போது? என வெற்றிமாறனிடம் கேட்கப்பட்டது.அதற்கு, நவம்பர் 24 அன்று அரசன் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொன்னார்.

அவர் சொன்னபடியும் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

அதேநேரம், நவம்பர் 25 அன்று அரசன் படத்தில் விஜய்சேதுபதி இணைகிறார் என்கிற அறிவிப்பு வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

அவர் மட்டுமின்றி ஆண்ட்ரியாவும் இந்தப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்கிற தகவலும் வெளியானது.

படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று சொன்ன நாட்களில் எல்லாம் தொடங்காமல் படம் குறித்த வெவ்வேறு அறிவிப்புகள் மட்டும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

எப்பதாம்ப்பா படப்பிடிப்பைத் தொடங்குவீங்க? என்று சிம்பு இரசிகர்கள் கேட்கத் தொடங்கினார்கள்.

இப்போது அதற்கு விடை கிடைத்திருக்கிறது.

டிசம்பர் முதல்வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்குகிறார் வெற்றிமாறன்.டிசம்பர் எட்டாம் தேதி முதல் அரசன் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்கிறார்.

முதல்கட்டப் படப்பிடிப்பில் கதாநாயகிக்கு வேலை இல்லை என்பதால் கதாநாயகியை இறுதி செய்வதில் தாமதம் நடந்து கொண்டிருக்கிறது.

படப்பிடிப்பு தொடங்கும் அதேநேரத்தில் நாயகியை இறுதி செய்யும் வேலைகளும் நடக்கவிருக்கின்றன என்கிறார்கள்.

முழுமையான திரைக்கதையுடன் வெற்றிமாறன் தயாராக இருப்பதால் படப்பிடிப்பு தொடங்கிவிட்டால் வேகமாக நடந்து முடிந்துவிடும் என்று நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.

நம்பிக்கை பலிக்கட்டும்.

Related Posts