அங்கம்மாள் – திரைப்பட விமர்சனம்
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கோடித் துணி என்கிற சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் அங்கம்மாள்.
இளம் வயதில் கணவரை இழந்த கீதா கைலாசம், தனது இரண்டு மகன்களை வளர்ப்பதற்காகக் கடுமையாக உழைக்கிறார். பால் வியாபாரம், விவசாயம் என்று கடுமையான உழைப்பாளியாக மட்டும் இன்றி, தைரியமான பெண்ணாக இருக்கிறார். அந்தக் காலப் பெண்கள் போல இரவிக்கை அணியாத பெண்மணியாக இருப்பதுதான் இந்தக்கதை படமாகக் காரணம்.
அவரை இரவிக்கை அணிய வைக்கவேண்டும் என்று அவருடைய மகன்கள் போராடுகின்றனர்.மகன்களின் விருப்பத்தை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதுதான் படம்.
அங்கம்மாளாக நடித்திருக்கும் கீதா கைலாசம், கிராமத்து இரும்புப் பெண்மணிகளைப் போல் அச்சுஅசலாக மாற வேண்டும் என்று உழைத்திருக்கிறார்.அவர்களுடைய உடல்மொழி,சுருட்டு பிடிக்கும் பாங்கு,வசன உச்சரிப்புகள் ஆகிய அனைத்தும் உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்கிறது.
அங்கம்மாளின் மூத்த மகனாக பரணி,பரணியின் மனைவியாக தென்றல், இளைய மகனாக சரண்,சரணின் காதலியாக முல்லையரசி, சரணின் நண்பராக சுதாகர் மற்றும் சிறுமி யாஷ்மின் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
கிராமத்து மனிதர்களாகவே அனைவரும் மாறியிருக்கிறார்கள்.அந்த மக்களின் மாசுமருவில்லாத உணர்வுகளையும் அப்படியே கடத்த முயன்றிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அன்ஜாய் சாமுவேலுக்கு மிகவும் நல்வாய்ப்பு.ஒளிப்பதிவாளர்கள் விரும்பும் வகையிலான கதைக்களம் அமைந்திருப்பதால் அவரும் உற்சாகமாகப் பணியாற்றியிருக்கிறார் என்பது காட்சிகளில் விரிந்திருக்கிறது.அவருடைய் உற்சாகம் பார்வையாளர்களுக்கும் பற்றுகிறது.
முகமது மக்பூல் மன்சூரின் இசை,தனித்துத் தெரியாமல் காட்சிகளுடன் கரைந்திருக்கிறது.இது படம் பார்க்கும் அனுபவத்தைக் காட்டிலும் நிஜத்தைப் பார்ப்பது போன்று இருக்கிறது.
பிரதீப் சங்கரின் படத்தொகுப்பில் படம் இயல்பாகக் கடந்து செல்கிறது.அங்கம்மாளை அனைவரும் பின்தொடர்ந்து செல்லும் வகையில் காட்சிகளைத் தொகுத்திருக்கிறார்.
துணிச்சல்காரப் பெண்மணிகளுக்கு எடுத்துக்காட்டாய் அங்கம்மாள் வாழ்க்கையைப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன்.மகன்கள் மற்றும் சமுதாயம் தன் மீது அக்கறை காட்டுவதைக் காட்டிலும் ஆதிக்கம் செலுத்த முயல்கின்றனர் என்பதை ஏற்கமுடியாமல் போராடும் அங்கம்மாள் என்கிற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ்நாட்டு கிராம வாழ்வை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார்.
– இளையவன்











