February 12, 2025
சினிமா செய்திகள்

பொங்கல் வெளியீட்டுப் படங்கள் எல்லாம் ரெட்ஜெயண்ட் வசமே – விவரம்

இவ்வாண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கலையொட்டி ஏழு திரைப்படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பாலா இயக்கத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் வணங்கான்,சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடித்திருக்கும் மதகஜராஜா,ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்திருக்கும் கேம்சேஞ்சர்,கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம்ரவி கதாநாயகனாக நடித்திருக்கும் காதலிக்க நேரமில்லை, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ்முரளி கதாநாயகனாக நடித்திருக்கும் நேசிப்பாயா,வாலிமோகன்தாஸ் இயக்கத்தில் ஷேன்நிகம் கதாநாயகனாக நடித்திருக்கும் மெட்ராஸ்காரன் மற்றும் அரவிந்த்சீனிவாஸ் இயக்கத்தில் கிஷன்தாஸ் நாயகனாக நடித்துள்ள தருணம் ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஏழு படங்களில் ஆறு படங்களை தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டை ரெட்ஜெயண்ட் நிறுவனம் செய்கிறது.

கேம்சேஞ்சர் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை ராக்போர்ட் நிறுவனம் பெற்றுள்ளது.அந்நிறுவனம் தமிழ்நாட்டின் விநியோகப் பகுதிகளுக்கு வெவ்வேறு விநியோகஸ்தர்களிடம் படத்தைக் கொடுத்திருக்கிறது.செங்கல்பட்டு விநியோகப்பகுதியில் கேம்சேஞ்சர் படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.

நேசிப்பாயா படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் இராகுல் பெற்றிருக்கிறார்.அதனால் அப்படத்தின் திரையரங்கு ஒப்பந்தங்கள் ரெட்ஜெயண்ட் நிறுவனம் மூலமே நடக்கின்றன என்று சொல்லப்படுகிறது.

காதலிக்க நேரமில்லை படத்தைத் தயாரித்திருப்பதே ரெட்ஜெயண்ட் நிறுவனம் என்பதால் அதையும் அந்நிறுவனமே வெளியிடும் என்பது வெள்ளிடைமலை.

கடைசிநேரத்தில் பொங்கல் வெளியீட்டில் இணைந்த மதகஜராஜா படத்தின் திரையரங்க வெளியீட்டையும் ரெட்ஜெயண்ட் நிறுவனமே மேற்கொள்ளவிருக்கிறது என்றும் அந்நிறுவனத்தின் பெயர் போடாமலே வெளியிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

தருணம்,மெட்ராஸ்காரன் ஆகிய படங்களின் திரையரங்க வெளியீட்டு வேலைகளையும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் இருப்போரே செய்கிறார்களாம்.

இறுதியாக பாலா இயக்கும் வணங்கான் படத்தையும் அந்நிறுவனத்திடமே கொடுத்திருக்கிறார்கள்.

இப்படி எல்லாப் படங்களும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை நோக்கியே போகக் காரணமென்ன?

திரையரங்கு உரிமையாளர்கள் ரெட் ஜெயண்ட் வெளியிடும் படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதால் அனைவரும் அவர்களிடமே போகின்றனர் என்றும் அவர்களிடம் போய்விட்டால் எல்லாப் படங்களுக்கும் சரிவிகிதத்தில் திரையரங்குகள் கிடைத்துவிடும் என்பதுமே காரணம் என்கின்றனர்.

அதோடு இந்தமுறை, சனவரி பத்தாம் தேதி வணங்கான்,கேம்சேஞ்சர் ஆகிய படங்களும், 12 ஆம் தேதி மதகஜராஜா படமும், 14 ஆம் தேதி காதலிக்க நேரமில்லை மற்றும் நேசிப்பாயா ஆகிய படங்கள் வருகின்றன.

ஒரேநிறுவனம் எல்லாப்படங்களையும் வெளியிடுகிறது என்பதால், பத்தாம் தேதி எல்லாத் திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டுவிட்டு 12 ஆம் தேதி ஒரு படம் வரும்போது அவற்றில் சிலவற்றை மாற்றிக் கொடுப்பது அடுத்து 14 ஆம் தேதி படங்கள் வெளியாகும்போது ஓடுகிற படங்கள் பொறுத்து திரையரங்குகளை மாற்றியமைப்பது போன்ற விசயங்கள் செய்ய வசதியாக இருக்கும் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இருக்காது என்று சொல்கிறார்கள்.

இவை எல்லாவற்றுக்கும் ஆட்சியதிகாரமே அடிப்படைக் காரணம் என்பதுதான் பெரிய நெருடல்.

Related Posts