லியோ முன்னோட்டத்தின் பின்விளைவுகள்
லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் விஜய்,த்ரிஷா,மிஷ்கின்,கவுதம்மேனன்,அர்ஜுன்,சஞ்சய்தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் லியோ. இப்படத்தின் முன்னோட்டம் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியானது.
வெளியான ஐந்துநிமிடங்களில் பத்துஇலட்சம் பேர் பார்த்துவிட்டார்கள் என்று படக்குழுவினர் பெருமைப்பட்டனர்.
அதேசமயம், அந்த முன்னோட்டத்துக்கு எதிர்ப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன. முன்னோட்டத்தில் அதிபட்ச வன்முறை, தெறிக்கும் இரத்தம், கெட்டவார்த்தை ஆகியனவற்றைக் குறிப்பிட்டு எதிர்ப்புகள் வருகின்றன.
இன்னொருபக்கம், இது ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் என்கிற ஆங்கிலப் படத்தின் தமிழ் மொழியாக்கம் என்பது உறுதியாகிவிட்டது என்று சொல்லி அப்படத்தின் காட்சிகளையும் லியோ முன்னோட்டக்காட்சிகளையும் ஒப்பிட்டு பதிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இவை ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் லியோ முன்னோட்டம் வந்த அதேநேரத்தில், அஜீத்தின் உலகத்துள்ளுந்துப் பயணம் தொடர்பாக மோட்டார்வாகன நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. விஜய்யின் லியோ பட முன்னோட்டம் குறித்த வாதப் பிரதிவாதங்களில் கலந்து கொள்ளாமல் தம் இரசிகர்களைத் தம்மை நோக்கித் திருப்பும் உத்திதான் இந்தச் செய்திக்குறிப்பு என்கிற விமர்சனமும் வருகிறது.
மூன்றாவதாக, நடிகர் சூர்யா தற்போது நடிக்கும் கங்குவா படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றிக்கு இன்று பிறந்தநாள்.
அவரும் லியோ முன்னோட்டம் வெளியான நேரத்திலேயே, சூர்யா மற்றும் இயக்குநர் சிவா ஆகியோரோடு அவர் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து, மிகவும் நினைவுகூறத்தக்க பிறந்தநாள் இன்று எனப் பதிவிட்டிருந்தார்.
சூர்யா இரசிகர்கள் அப்புகைப்படங்களைப் பகிர்ந்து மகிழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
முன்பெல்லாம்,லியோ முன்னோட்டம் போல் ஒரு பெரியநடிகர் படம் தொடர்பான ஏதாவதொன்று வெளியாகிறதென்றால் மற்ற பெரியநடிகர்கள், இந்தநேரத்தில் நம்முடைய செய்தி எதுவும் வேண்டாம் என்று தவிர்த்துவிடுவார்கள்.
இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. சமூக ஊடகங்களே நடிகர்களின் வலிமையைத் தீர்மானிக்கும் சக்தியாகிவிட்டபடியால் ஒரு நடிகரின் செய்தி வரும்போது அதை மடைமாற்ற அல்லது மறக்கடிக்க இன்னொரு நடிகர் ஏதாவதொன்றைச் செய்கிறார் என்கிற விமர்சனத்துக்குச் சான்றாக இன்றைய நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன.











