முதல்படம் வெற்றி அடுத்தபடம் சிக்கல் 3 ஆவது தோல்வி ஆனாலும்… கலக்கும் கார்த்திக்சுப்புராஜ்
2012 அக்டோபர் 12 ஆம் தேதி எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளீயான படம் பீட்சா. வெளியான நாள் முதலே பெரிதும் கவனம் ஈர்த்தது அந்தப்படம்.
இன்றைக்குப் புகழ்பெற்றிருக்கும் விஜய்சேதுபதி அந்தப்படத்தின் நாயகன், ரஜினியின் பேட்ட பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் முதல்படம் அது.
அந்தப்படத்தின் சிறந்த வெற்றி கார்த்திக்சுப்புராஜை பெரிய இயக்குநர் ஆக்கிவிட்டது. தமிழ்த்திரையுலகுக்குப் புதுஇரத்தம் பாய்ச்சப்பட்டிருக்கிறது என்றெல்லாம் பாராட்டுகள் குவிந்தன.
அவருடைய இரண்டாவது படம் ஜிகர்தண்டா. முதல்படம் பெரிய வெற்றி என்றதும் அடுத்த படம் எளிதாகக் கிடைத்தது. ஆனால் அப்படத்தை முடித்து வெளியிடுவதில் ஏராளமான சிக்கல்களை எதிர்கொண்டார்.
வசூல்ரீதியாக அந்தப்படம் சரியில்லை என்றாலும் அதில் வில்லனாக நடித்த பாபிசிம்ஹாவுக்குப் பெரிய வாழ்க்கையைக் கொடுத்தது.
மூன்றாவதாக அவர் இயக்கிய படம் இறைவி. விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா ஆகிய மூன்று நாயகர்களை வைத்து இயக்கியிருந்தார்.
இரண்டாவது பட உருவாக்கத்தில் அவருக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்களை இந்தத் திரைக்கதையில் சேர்த்துவிட்டார் என்று சொல்லப்பட்டது.
2016 ஜூன் 3 இல் வெளியான அந்தப்படமும் ஓடவில்லை.
அடுத்து பிரபுதேவாவை வைத்து அவர் இயக்கிய வசனமில்லாப் படம் மெர்க்குரி.2018 ஏப்ரலில் வெளியான அதுவும் தோல்வி.
ஆனாலும் அவருக்கு தனுஷ் படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
அதற்கு நடுவே திடீர் ஆச்சரியமாக ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான பேட்ட படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது.
2019 சனவரி 10 ஆம் நாள் வெளியான அந்தப்படம் பெரிய வெற்றி. அதோடு பழைய ரஜினியை மீண்டும் பார்த்தோம் என்று எல்லோரும் பரவசப்படும் வகையில் அந்தப்படம் அமைந்திருந்தது.
அடுத்து அவர் தனுஷ் படத்தை இயக்கப்போகிறார் என்றும் மீண்டும் ரஜினி படம் இயக்கவிருக்கிறார் என்றும் தகவல்கள் உலவுகின்றன.
எந்தப்படத்தை இயக்கினாலும் அதில் தன் முத்திரையை அவர் பதிப்பார் என்பதில் யாருக்கும் அய்யமில்லை.
ஐந்து படங்களிலேயே தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருமாறி பல புதிய இயக்குநர்களுக்கு முன்னோடியாகத் திகழும் கார்த்திக் சுப்புராஜ் இன்று (மார்ச் 19,2019) தனது 37 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்திக் சுப்புராஜ்.
– அ.தமிழன்பன்











