விமர்சனம்

90 எம் எல் – திரைப்பட விமர்சனம்

திருமணமான பெண் தாமரை (பொம்மு லட்சுமி),திருமணமாகாத சுகன்யா (மோனிஷா ராம்),திருமணமாகி கையில் குழந்தையுடன் இருக்கும் காஜல் (மசூம் ஷங்கர்),புதிதாக திருமணமான பாரு (ஸ்ரீகோபிகா) ஆகிய நான்கு பெண்கள் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறார்கள்.

அங்கு புதிதாகக் குடியேறுகிறார் ரீட்டா (ஓவியா). அதுவரை தாங்கள் உண்டு தங்கள் குடும்பம் உண்டு வாழும் நான்கு பெண்களின் வாழ்க்கையில் புயல்போல் நுழைகிறார்..

பொம்மு லட்சுமி பிறந்த நாள் அன்று ஓவியா மது விருந்து கொடுக்க, அதுவரை பழக்கமே இல்லாத மற்ற பெண்களும் மது அருந்துகின்றனர்.

பாலியல் குறித்தும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், திருமணம் குறித்தும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்..

திருமணமாகாத சுகன்யா தன் காதலுக்கு மதம் தடையாக இருப்பதாகப் புலம்புகிறார். சுகன்யாவைக் காதலருடன் சேர்க்க நான்கு பெண்களும் திட்டமிட்டு அதைச் செயலாக்கவும் செய்கின்றனர். அப்போது உச்சநீதிமனறத் தீர்ப்பின்படி தவறு இல்லை என்று சொல்லப்படும் ஓர் அதிர்ச்சியைக் காட்டுகின்றனர்.

ஏராளமான முத்தக் காட்சிகள், படுக்கையறைக் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள், பெண்கள் மது அருந்துவது, போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற காட்சிகள் படம் நெடுக நிறைந்திருக்கின்றன. அவை இல்லாமல் இந்தக்கதையை மிக அழகாகச் சொல்லியிருந்திருக்கலாம்.

தொடக்கத்திலிருந்து கடைசிவரை வருகிறார். ஓவியா. அவருடைய பாத்திரம், கனமான சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது. அவர் பேசும் வசனங்களில் உள்ள கருத்துகள் நடிப்பிலும் உடல்மொழியிலும் இல்லை.

கணவன் மீதான அன்பை வெளிப்படுத்தும் தருணங்களிலும், கண்டுபிடிச்சிட்டியா என்று கணவனிடம் வெட்கப்பட்டுக் கேட்கும்போதும் பொம்மு லட்சுமியின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. மசூம் ஷங்கர், மோனிஷா ராம், ஸ்ரீகோபிகா ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களில் பொருந்துகிறார்கள்.

இந்தப்படத்துக்கு சிம்பு இசையமைத்துள்ளார். மரியாவின் குரலில் வருகிற பிரியாணி பாடல் கவனிக்க வைக்கிறது. மற்றவை வழக்கம் போல இருக்கின்றன.

அர்விந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், ஆண்டனியின் படத்தொகுப்பும் படத்துக்கு வலுச் சேர்க்கின்றன.

பெண்கள் மது அருந்துவது, கஞ்சா அடிப்பது போன்ற காட்சிகள் மையக்கதைக்குத் தேவையில்லாமலே திணிக்கப்பட்டிருக்கின்றன.

பெண்ணைப் பேச பெண்ணே எழு என்றார் கவிஞர் அறிவுமதி. இந்தப்படத்தில் பெண்ணைப் பேச நினைத்திருக்கிறார் இயக்குநர்
அழகிய அசுரா என்கிற அனிதாஉதீப்.

ஆனால் மையக்கருத்தை விட நாயகிகளின் உடலழகு,ஆண்கள் செய்தாலும் தப்பு என்கிற மது போதைப்பொருள் பழக்கம், இரட்டை அர்த்த வசனங்கள் ஆகியனவற்றை அதிகம் நம்பியிருக்கிறார்.

அவற்றைத் தவிர்த்திருந்தால் பெண்களின் உரிமைகளைப் பேசுகிற படமாக அமைந்திருக்கும்.

Related Posts